ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழக வானொலிக்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வழங்கிய பேட்டியின் எழுத்துப் படிவம், துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறிக் கொள்வது போல அவர் ஜோகூர் பாதுகாப்பு குறித்து எதுவும் கூறவில்லை என்பதை மெய்பிக்கிறது.
முஹைடின் சொன்னது தவறு என்பதை காட்டுவதற்காக, ஆசிய நடப்பு விவகாரங்களுடன் தொடர்பு என்னும் தலைப்பைக் கொண்ட வானொலி நிகழ்ச்சிக்கு லிம் வழங்கிய பேட்டியின் அதிகாரத்துவ எழுத்துப் படிவத்துக்கான இணைப்பை லிம் அலுவலகம் இன்று வழங்கியது.
“மற்ற மாநிலங்களை லிம் குவான் எங் கீழறுப்புச் செய்யக் கூடாது-முஹைடின்” என்னும் தலைப்பைக் கொண்ட செய்தியை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கேட்குமாறு பெர்னாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றுடன் அந்த எழுத்துப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது.
“அந்த ஆஸ்திரேலிய வானொலிப் பேட்டியின் போது லிம் ஜோகூர் பற்றியும் மற்ற மலேசிய மாநிலங்களின் நிலவரம் பற்றியும் எதுவும் பேசவே இல்லை. பினாங்கு, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், அடைக்கலம் நாடுவோர் மீதான ஒப்பந்தம் ஆகியவை மட்டுமே விவாதிக்கப்பட்டது”, என்று லிம்-மின் பத்திரிக்கை செயலாளர் வோங் கிம் பெய் கூறினார்.
அந்தச் செய்து “தவறானது, உண்மையில்லாதது, பொய்கள் நிறைந்தது” என வோங் பெர்னாமா தலைமை ஆசிரியர் யோங் சூ ஹியோங்-கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் செய்தியின் விளைவாக அம்னோ தலைவர்கள் லிம்-மை “கண்மூடித்தனமான வேகத்தில்” தாக்கிப் பேசி வருகின்றனர் என்றும் அந்தக் கடிதம் குறிப்பிட்டது.
அந்தச் செய்திக்காக பெர்னாமா நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லிம் அந்தக் கடிதத்தில் எச்சரித்துள்ளார்.
பெர்னாமா ஏற்கனவே 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி, அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட தவறான செய்திக்காக லிம்-மிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
செப்டம்பர் 23ம் தேதி வெளியான பெர்னாமா தகவல், பினாங்கைப் போல் அல்லாது ஜோகூர் பாதுகாப்பான மாநிலம் அல்ல என்றும் அங்கு கடத்தல்கள் சாதாரணமானவை என்றும் லிம் “கூறியதாக” தெரிவித்தது.
லிம், ஜோகூரைக் கீழறுப்புச் செய்வதாகவும் பொருத்தமற்ற முதலீட்டு இலக்கு எனச் சித்தரிப்பதாகவும் முஹைடின் கூறியதாக அந்தச் செய்தி மேலும் குறிப்பிட்டது.