கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்கும் யோசனை காரணமாக பக்காத்தான் ராக்யாட் கூட்டணி நிலை குலையாது. இவ்வாறு அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைமைச் செயலாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
ஹுடுட் விவகாரத்தை வரும் புதன் கிழமை அந்தக் கூட்டணியின் மூத்த தலைவர்கள் விவாதிக்கவிருக்கும் வேளையில் மூன்று கட்சிகளின் தலைமைச் செயலாளர்களும் அந்த உறுதி மொழியை வழங்கியுள்ளனர்.
புதன் கிழமை கூட்டத்தில் சர்ச்சைக்குரிய அந்த விஷயம் தீர்க்கப்படும் வரையில் அது குறித்து பகிரங்கமாக ஏதும் விவாதிக்க வேண்டாம் என்றும் அவர்கள் அனைத்து பக்காத்தான் தலைவர்களையும் வேண்டிக் கொண்டார்கள்.
“பக்காத்தானைப் பிளவுபடுத்துவது அம்னோ நோக்கம் என்றால் அதனை சாதிக்க முடியாது. ஏனெனில் எங்கள் ஒத்துழைப்பு இப்போது இன்னும் வலுவாக இருக்கிறது, முன்னைக் காட்டிலும் முதிர்ச்சி அடைந்துள்ளது,” என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
அவர் கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார்.
அப்போது பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் டிஏபி பேராளர் அந்தோனி லோக்கும் உடனிருந்தார்கள்.
“13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எங்களைப் பிளவுபடுத்துவதே அம்னோவின் ஒரே நோக்கம். அதற்கு ஹுடுட் சட்டத்தில் எந்த ஈடுபாடும் இல்லை. அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் -னுக்கு சவால் விடுப்பதற்கு பக்காத்தான் நிலைத்திருக்கும் என்பதை நாங்கள் மக்களுக்குக் காட்டுவோம்,” என்றார் லோக்.
முஸ்தாபா இவ்வாறு சொன்னார்: “அம்னோ அந்த விவகாரத்தை ஒரு வியூகமாக்கி எங்களுக்கு இடையில் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்த அம்னோ முயலுகிறது. நாங்கள் அதன் வியூகத்திற்கு இசைவாக நடக்க மாட்டோம். பக்காத்தான் நிலைகுலையும் என்ற விவகாரமே எழவில்லை. இறைவன் கருணையால் நாங்கள் அந்தப் பிரச்னையைத் தீர்ப்போம்.”