‘அகமட் சார்பைனியின் மரணத்தில் சூது ஏதுமில்லை’என நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கத் துறையின் மூத்த அதிகாரியான அகமட் சார்பைனி,  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோலாலம்பூர் அலுவலகக் கட்டிடத்தின் ஓரத்தில் நின்ற பின்னர் விழுந்ததாக கோலாலம்பூர் குரோனர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அவரது மரணத்தில் எம்ஏசிசி சம்பந்தப்பட்டுள்ளதாக கூறும் வாதம் ஏற்கத்தக்கதல்ல என குரோனர் அய்ஸாத்துல் அக்மால் மஹாராணி கூறினார்.

“அந்த சம்பவத்தில் போராட்டம் ஏதும் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் இல்லை. அவர் தற்கொலை செய்து கொண்டார் என்னும் கூற்றையும் நீதிமன்றம் நிராகரிக்கிறது.”‘

56 வயதான சார்பைனி எதிர்பாராத விதமாக கட்டிடத்திலிருந்து விழுந்தார். விழுந்த போது அவர் சுய நினைவோடு இருந்தார் என்றும் குரோனர் கூறினார்.

“விழுந்தவுடன் அவர் உடனடியாக மரணமடைந்தார் என்றும் நீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது. அவரது கால்கள் முதலில் தரையை தொட்டன. அதனால் இரு கால்களிலும் காயம் ஏற்பட்டது. தலையிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.”

சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தைச் சார்ந்த அதிகாரியான முகமட் அபாஸாபிரி முகமட் அபாஸ் மரண விசாரணையில் உதவி செய்தார். எம்ஏசிசி சார்பில் முகமட் ஷாபி அப்துல்லா ஆஜரானார்.

அகமட் சார்பைனி குடும்பத்தை வழக்குரைஞர் அவ்தார் சிங் பிரதிநிதித்தார். டிப்பி ஷெங்கர் (எம்) லாஜிஸ்டிக்ஸ் பெர்ஹாட் என்னும் பன்னாட்டு நிறுவனத்தின் சார்பில் வழக்குரைஞர்களான ரோஸ்லி டாஹ்லானும் நாடியா மார்னி மாட் ஜின்-னும் வழக்கு விசாரணையைக் கவனித்தார்கள்.

சார்பைனியின் மனைவி மாசியா என்ற மாஷியா மானாப்பும் சமூக கவனிப்பு அமைப்பின் தலைவர் ரோபர்ட் பாங்-கும் நீதிமன்றத்தில் காணப்பட்டனர்.

மொத்தம் 14 நாட்களுக்கு நடைபெற்ற விசாரணையின் போது மொத்த 34 பேர் சாட்சியமளித்தார்கள்.

ஏப்ரல் 6ம் தேதி கோலாலம்பூர் ஜாலான் கொக்ரெனில் உள்ள புதிய கோலாலம்பூர் எம்ஏசிசி அலுவலகத்தின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த பின்னர் அகமட் சார்பைனி மரணமடைந்தார்.

மூன்று பி இயக்கத்தின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். ஏப்ரல் 6ம் தேதி எம்ஏசிசி அலுவலகத்துக்கு வந்தார்.

சார்பைனி மரணத்தில் தவறு நிகழ்ந்திருப்பதாக அவரது நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் கூறிக் கொண்டனர். அவர் தூய்மையான அதிகாரி என்றும் இந்த ஆண்டு தமது மனைவியுடனும் பெற்றோர்களுடனும் ஹாஜ் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார் என்றும் அவர்கள் கூறினர்.