சிலாங்கூர் பாகாங்கிடம் சொல்கிறது: தண்ணீர் ஒப்பந்தத்தை முடக்குங்கள்

சிலாங்கூருக்குச் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை விற்கும் ஒப்பந்தத்தை முடக்கப் போவதாக தாம் மருட்டியுள்ளதை நிறைவேற்றுமாறு பாகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கோப்புக்கு சிலாங்கூர் சவால் விடுத்துள்ளது.

“அவர் விடுத்துள்ள சிறந்த அறிக்கைகளில் இது ஒன்று என நான் எண்ணுகிறேன். அதனால் நாங்கள் ஆண்டு ஒன்றுக்கு 60 மில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்த முடியும் !” என சுகாதாரம், தோட்டத் தொழிலாளர்கள், வறுமை ஒழிப்பு, கருணை அரசாங்கம் ஆகியவற்றுக்கு பொறுப்பான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினரான டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறினார்.

“அவர் வாய்மொழியாக மருட்டல் விடுப்பதோடு நின்று விடாமல் எழுத்து வடிவில் அதனை வெளியிடுவார் என நாங்கள் நம்புகிறோம். அவர் சொன்னதைச் செய்ய வேண்டும்,” என அவர் நேற்று தொடர்பு கொள்ளப்பட்ட போது சொன்னார்.

சிலாங்கூர் அந்த விவகாரத்தை அரசியலாக்கி வருவதாலும் அந்த ஒப்பந்தத்தில் அக்கறை காட்டுவதாக தெரியாததாலும் அதனை பாகாங் மறு ஆய்வு செய்வது பற்றிப் பரிசீலிக்கும் என நேற்று அட்னான் அறிவித்திருந்தார்.

அந்த ஒப்பந்தம் தொடர்பான நிபந்தனைகளையும் தமது அதிகாரிகள் ஆய்வு செய்வதாகவும் அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூரை பக்காத்தான் ராக்யாட் தக்க வைத்துக் கொள்ளுமானால் ஒரு கன மீட்டருக்கு 10 சென் என்ற ஒப்புக் கொள்ளப்பட்ட விலையை உயர்த்தவும் கூடும் என அவர் சொல்லியிருந்தார்.

“ஒப்புக் கொள்ளப்பட்ட விலை பிஎன் தலைமையிலான மாநில அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்டதாகும். பக்காத்தான் ஆட்சியை பிடிக்குமானால் அதனை ஒரு கன மீட்டருக்கு 1 ரிங்கிட்டாகக் கூட நாங்கள் உயர்த்தலாம்,” என அவர் சொன்னதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

டாக்டர் முகமட் கிர் தோயோ மாநில நிர்வாகத்துக்கு தலைமை ஏற்றிருந்த போது அந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

6 பில்லியன் ரிங்கிட் செலவு பிடிக்கும் லங்காட் 2 நீர் சுத்தகரிப்பு நிலையம் கட்டப்படா விட்டால் சிலாங்கூர் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கும் என்று புத்ராஜெயாவும் பிஎன் -னும் அடிக்கடி கூறிக் கொண்டு வருகின்றன.

ஆனால் சபாஷ் எனப்படும்  Syarikat Bekalan Air Selangor-ரை மறு சீரமைப்பு செய்வதற்கு உதவியாக அதன் சொத்துக்களை தான் கொள்முதல் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு தண்ணீர் கட்டண உயர்வை நிறுத்தும் வரையில் அதற்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை என மாநில அரசாங்கம் கூறுகின்றது.

தண்ணீர் கட்டணங்களை உயர்த்தி சேவகர் நிறுவனங்கள் ஆதாயம் அடைவதை உறுதி செய்வதற்காக லங்காட் 2 கட்டுமானச் செலவுகளை புத்ராஜெயா மிகவும் உயர்த்திக் காட்டுவதாகவும் தண்ணீர் சொத்துக்களை தேசிய மயமாக்கத் திட்டமிடுவதாகவும் சிலாங்கூர் குற்றம் சாட்டியுள்ளது.