எஸ்யூபிபி-யின் ஆறு பேராளர்கள், ஒர் எம்பி நிலை என்ன ?

எஸ்யூபிபி என்ற சரவாக் ஐக்கிய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோரது தலைவிதி ‘தொங்கி’ கொண்டிருக்கிறது. காரணம் அந்தக் ‘கட்சியின் நலனுக்கு முரணாக செயல்பட்டதற்காக’ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எஸ்யூபிபி தயாராகி வருவதாகும்.

வோங் சூன் கோ, (பாவான் அஸ்ஸான்), டாக்டர் ஜெரிப் சுசில் (பெங்கோ), ரானும் மினா (ஒப்பார்), பிரான்சிஸ் ஹெர்டென் ( சிமங்காங்) லீ கிம் ஷின் (செனாடின்), ஜானிச்சால் ராயோங் (எங்கிலி), லானாங் எம்பி தியோங் கிங் தாய் கிங் ஆகியோரே அந்த எழுவர் ஆவார்.

கடந்த சனிக்கிழமையன்று கூடிய கட்சியின் மத்தியக் குழு அவர்களைக் குறிப்பாக அப்துல் தாயிப் மாஹ்முட் அரசாங்கத்தில் மூத்த அமைச்சராக இருக்கு வோங்கை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.

வரும் சனிக்கிழமையன்று அவசரமாகக் கூடும் மத்திய செயல் அந்தத் தீர்மானத்தை இறுதி முடிவு செய்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்பும் என தெரிய வருகின்றது.

எஸ்யூபிபி தலைமைத்துவத்தைக் குறை கூறும் அறிக்கைகளை வெளியிட்டதற்காகவும் கட்சியை  கலந்து ஆலோசிக்காமல் சமூகத் தலைவர்கலையும் அரசியல் செயலாளர்களையும் நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களில் இயக்குநர்களையும் அவர் நியமித்து வருவதற்காகவும் வோங் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்குவதாக சொல்லப்படுகின்றது.

மத்திய செயல் குழுவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஏழு இடங்களை வோங்கும் அவரது குழுவினரும் ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு அந்தக் குழுவின் கூட்டங்களிலும் கடந்த 9 மாதங்களாகக் கலந்து கொள்ளவில்லை.

அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளித்த வோங் தம்மை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்புவதற்கான காரணங்கள் தமக்கு நிச்சயமாகத் தெரியாது என்றார்.

“எனக்கு எதிராக தனிப்பட்ட விரோதங்களை யாராவது கொண்டிருந்தால் தவிர எஸ்யூபிபி தலைவர் (பீட்டர் சின்) ஏன் என்னைக் குறி வைக்கிறார் என்பதும் என்னை விரட்டுவதற்கு காரணங்களை ஏன் தேடுகிறார் என்பதும் எனக்குத் தெரியவில்லை,” என வோங் விடுத்த அறிக்கை கூறியது.

“நான் அதிகாரத்துவ விஷயங்களில் சம்பந்தப்படும் போது பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு இணங்க நான் செயல்படுகிறேன். கட்சித் தலைவர் என்ற முறையில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் என் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும் நான் கருதுகிறேன்.”

“என் மனச்சாட்சி தெளிவாக உள்ளது,” எனக் கூறிய வோங், தம்மைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான தீர்மானத்தை சில தலைவர்கள் சமர்பித்தது குறித்து தாம் கவலைப்படவும் இல்லை, பரபரப்படையவும் இல்லை என்றார்.

“அவர்கள் தோல்வி கண்டவர்கள். நான் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டது மீது வெறுப்படைந்தவர்கள்.  மாநில அமைச்சரவையில் நான் சேருவதை அவர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் அதில் அவர்கள் தோல்வி கண்டனர்.  இப்போது அவர்கள் என்னை வீழ்த்த சதி செய்கின்றனர்,” என்றார் வோங்.

சின் விவேகமான தலைவர் என்ற முறையில் மற்றவர்களுக்கு எளிதில் மயங்கி அவர்களுக்கு ஆயுதமாகி விடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.