டிவி3: “லிம் பழித்துக் கூறியது ஆஸ்திரேலியாவில் அல்ல. சிங்கப்பூரில்”

ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழக வானொலி நிலையம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜோகூரைத் தாம்  பழித்துக் கூறியதாக சொல்லப்படுவதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மறுத்துள்ள வேளையில் அந்த டிஏபி தலைமைச் செயலாளர் சிங்கப்பூரில் ஜோகூரைப் பற்றி “தப்பாகச் சொன்னதாக” டிவி3 தொலைக்காட்சி நிலையம் நேற்றிரவு தெரிவித்துள்ளது.

அண்மையில் சிங்கப்பூரில் உள்ள அந்நிய நிருபர்களைச் சந்தித்த போது ஜோகூரை அதன் குற்றச் செயல் விகிதத்திற்காக அவர் இழிவுபடுத்தியதாக கூறும் ஒலிப்பதிவு டிவி3ன் புல்லட்டின் உத்தாமா என்ற பிரதானச் செய்தி அறிக்கையில் ஒளிபரப்பானது.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி சிங்கப்பூர் அந்நிய நிருபர்கள் சங்கத்துடன் நடத்தப்பட்ட நண்பகல் விருந்து நிகழ்வில் லிம் அந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக அம்னோவுடன் தொடர்புடைய அந்த தொலைக்காட்சி நிலையம் கூறியது.

லிம் தமது உரையில் பினாங்கின் பாதுகாப்பு குறித்து பெருமையாகக் குறிப்பிட்ட போது சிங்கப்பூரர்கள் ஜோகூருக்குச் செல்லும் போது கடத்தப்படும் சாத்தியம் அதிகம் எனக் கூறியதாக அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது.

டிவி3 செய்தி அறிக்கை வெளியிட்ட, குரல் ஒலிப்பதிவு எனக் கூறுவதின் முழு எழுத்துப்படிவம்:

“பினாங்கு தூய்மையாகவும் பசுமையாகவும் இருப்பது கண்கூடு. பாதுகாப்பானதும் கூட. நாம் குற்றச் செயல் குறியீட்டைக் குறைப்பது பற்றிப் பேசுகிறோம். குற்றச் செயல்களைக் குறைப்பதில் கடந்த ஆண்டு பினாங்கு முதலிடம் வகிக்கிறது. நாங்கள் கடந்த ஆண்டு குற்ற செயல் விகிதத்தை 37 விழுக்காடு குறைத்துள்ளோம். இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் மட்டும் குற்றச் செயல்கள் மேலும் 25 விழுக்காடு சரிந்துள்ளன.

“நீங்கள் பினாங்கிற்கு வந்தால் உங்கள் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் சிங்கப்பூரர்களாக இருந்தால் ஜோகூரில் நீங்கள் கடத்தப்படும் சாத்தியம் உண்டு. நீங்கள் எந்த சிங்கப்பூரரையும் கேட்டுப் பாருங்கள்,அவர்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் பினாங்கிற்கு வந்தால் உங்களுக்கு அந்தப் பிரச்னை இருக்காது.”

அதே டிவி3 பிரதான செய்தி அறிக்கையில் அனைத்துலக வாணிக தொழிலியல் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதீருடைய பேட்டியும் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. லிம், மற்ற மாநிலங்கள் மீது  ஆதாரமற்ற, பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடக் கூடாது என்றும் அது மலேசியாவின் தோற்றத்தை முழுமையாகப் பாதிக்கும் என்றும் முக்ரிஸ் தமது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.