ஸாக்கி: நல்ல நீதிபதிகள் கிடைப்பது எளிதல்ல

ஸாக்கி அஸ்மி, தலைமை நீதிபதியாக இருந்த மூன்றாண்டுக்காலத்தில், வழக்குரைஞர்களில் அறுவரைத் தேர்ந்தெடுத்து நீதிபதிகளாக்கினார்.

இது ஒரு பெரிய எண்ணிக்கைதான் என்றும் கூறுகிறார் ஸாக்கி. சாதாரணமாக, வழக்குரைஞர்கள் நீதிபதிகளாக விரும்புவதில்லை, ஏனென்றால் இங்கு வருமானம் குறைவு.

“இன்னும் பலரைச் சேர்க்க விருப்பம்தான். மேலும் இருவரையாவது சேர்க்க நினைத்தேன். கடைசி நேரத்தில் மறுத்து விட்டார்கள். அவர்களுக்குச் சம்பளம் போதவில்லை”, என்று ஸாக்கி அண்மையில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார்.

“தரமான ஒரு வழக்குரைஞரால் ஆண்டுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் சம்பாதிக்க முடியும்……. நீதிபதியானால், ரிம400,000-தான் கிடைக்கும். எவர் வருவார்?புரோட்டோன் சாகாவா புரோட்டன் பெர்டானாவா, எதை விரும்புவார்கள்?”

அதனால், நீதிபதிகளுக்கு உரிய சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்கிறாரவர்.

ஸாக்கி, தலைமை நீதிபதியாக இருந்தபோது நீதிபதிகளுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டது. 40விழுக்காடு உயர்த்தப்பட்டதாக அவர் மதிப்பிடுகிறார்.

ஜூலை மாதம் 1971ஆம் ஆண்டு நீதிபதிகள் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள், நாட்டின் நான்கு உயர்நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெறப் பத்தாண்டுக் காலம்  பணியாற்ற வேண்டும் என்றிருந்ததை மாற்றி அமைத்தன. இப்போது அவர்கள் மூன்றாண்டுகள் பணிபுரிந்தால் போதும், முழு ஓய்வூதியம் பெறத் தகுதி பெறுவார்கள்.

இந்தச் சட்டத் திருத்தம், 2009 ஜனவரிக்கு பின்தேதியிடப்பட்டு அமலாக்கம் செய்யப்பட்டது.

ஸாக்கி, 2007 டிசம்பரில் முறையீட்டு நீதிமன்றத் தலைவராக நியமிக்கப்பட்டு இவ்வாண்டு செப்டம்பர் 14-இல், 66-வது வயதில் தலைமை நீதிபதியாக பணிஓய்வு பெற்றார்.

ஸாக்கிக்கு நன்மை செய்வதற்காகவே அந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாக சில வழக்குரைஞர்கள் கூறிக்கொண்டனர். ஆனால், ஸாக்கி அதை மறுத்தார்.

பணிஓய்வு பெறுவோருக்கு அவர்களின் பணியை மதித்து பணிக்கொடை வழங்கப்படுவது உண்டு. ஸாக்கி, பணிக்கொடையாக தமக்கு வழங்கப்பட்ட தொகையை வெளியிட மறுத்தார். அது ரிம2மில்லியனாக இருக்கலாம் என்று கூறப்படுவதையும்  “சுத்த அபத்தம்” என்று நிராகரித்தார்.

ஸாக்கி, ஷாரிசாட் ரஷிட், லீ வழக்குரைஞர் நிறுவனத்தில் இருந்தபோது பெரிய நிறுவனங்களுக்கான வழக்குரைஞராக பணிபுரிந்திருக்கிறார். பெரிய, பெரிய நிறுவனங்களின் இயக்குனர் வாரியங்களிலும் அவர் இடம்பெற்றிருந்தார். பெட்ரோனாஸ்,  எஸ்பி சித்தியா பெர்ஹாட் குழுமம் போன்ற நிறுவனங்களின் தணிக்கைக்குழ உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.

அம்னோவில், ஒரு காலத்தில் அதன் ஒழுங்குவாரிய துணைத் தலைவராகவும் கட்சியின் சட்ட ஆலோசகராகவும் இருந்திருக்கிறார்.

நிறுவனங்களின் வழக்குரைஞராக இருந்த இந்த அனுபவம்தான், அப்போதைய பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி, நீதித்துறைக்குத் தம்மை அழைத்து வரக் காரணமாக இருந்திருக்கும் என்று ஸாக்கி கருதுகிறார்.

தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில், நாடு முழுக்கப் பயணம் செய்து நீதிமன்றங்கள் செயல்படும் விதத்தை நேரில் கண்டறிவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார் ஸாக்கி.

“சொந்த தொழில் செய்தால் இதைத்தானே செய்வேன். ஒவ்வொரு மேசைக்கும் சென்று வேலை எப்படி நடக்கிறது என்று பார்ப்பேன். (ஒரு கடிதம் கீழே விழுந்து கிடந்தால்) “ஏன் அப்படிக் கிடக்கிறது?’ என்று கேட்பேன். திடீர் சோதனைகளை மேற்கொள்வேன்.

“இல்லையென்றால், நான் போவதற்குமுன்பே இடம் சுத்தமாக்கி வைக்கப்பட்டிருக்கும்.”

தாம் கொண்டுவந்த சீரமைப்புகளுக்கு நீதிமன்றத் தலைவர்கள் நல்லாதரவு கொடுத்தார்கள் என்றாரவர்.

தேங்கிக்கிடந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு நீதித்துறை அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கையை உலக வங்கியும் வழக்குரைஞர் மன்றமும் பாராட்டியுள்ளன என்றாரவர்.

ஒரு வழக்கின் தீர்ப்புக்கு 10, 15 ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தால் “நீதி இல்லை” என்றுதான் அர்த்தம்.

“தலைமை நீதிபதி நியமனத்தை ஏற்றுக்கொண்டதில் எனக்கு வருத்தம் கிடையாது. தேங்கிக் கிடந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாக அதைக் கருதுகிறேன்”, என்றாரவர்.

TAGS: