தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு கோவில்களின் நிதி பேருதவியாகும், சார்ல்ஸ் சந்தியாகோ

அண்மையில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்காக பெருமாள் ஆலயம் ரிம5000 வழங்கியது மிகவும் பாராட்ட வேண்டிய செயல் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ என்று கூறினார்.

நாட்டில் மொத்தம்  523 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகின்றன. மாணவர்களும் நன்றாக கல்வி கற்று சிறந்து விளங்கி வருகின்றனர். ஆனாலும் இந்த மாணவர்கள் கல்வியில் மேலும் சிறந்து விளங்க பல தடைகள் இருந்து வருகின்றன. அடிப்படை வசதியின்மையாலும் வகுப்பறை பற்றாக்குறையினாலும் பள்ளியை மேம்படுத்தவும் நிதி இல்லாமல் பல தமிழ்ப் பள்ளிகள் தவிக்கின்றன. இந்தத் தமிழ்ப்பள்ளிகளின் பட்டியலில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியும் அடங்கும் என்றாரவர்.

இப்பள்ளி அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க புது வகுப்பறைகள் கட்ட எண்ணம் கொண்டிருந்ததது. இந்தப் பிரச்சனையை அறிந்த சிலாங்கூர் மாநில அரசாங்கம் அப்புது வகுப்பறைகள் கட்ட நிலம் ஒதுக்கிக் கொடுத்தும், அக்கட்டட பணிகளைத் தொடர பொருளாதார ரீதியில் பல இன்னல்களை அப்பள்ளி சந்தித்து வந்துள்ளது.
இம்மாதிரி  இக்கட்டான சூழ்நிலையில் பல ஆண்டுகாலமாக  பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் சிக்கிக் கொண்டு தவிக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய சார்ல்ஸ், இப்பள்ளிகளின் வளர்சிக்காக அரசாங்கத்திடம் பண உதவி எதிர்பார்த்திருப்பது இழவுகாத்த கிளியின் நிலையாகி விட்டது என வருத்தம் தெரிவித்தார்.

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு  நிதி உதவி வழங்கிய கிள்ளான் பெருமாள் ஆலயத்திற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்ட சார்ல்ஸ், இது போன்று இதற்கு  முன்பு தாமான் கேம் காளி கோவில், கிள்ளான் வாட்சன் தமிழ்ப் பள்ளிக்கு நிதி உதவி வழங்கியதை நினைவு கூர்ந்தார்.

இந்த  ஆலயங்கள் மற்ற ஆலயங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி என அவற்றை புகழ்ந்தார்.
தர்மம் தலை காக்கும் என்ற பழமொழிக்கொப்ப நமது ஆலயங்கள் செயல் பட்டால், நமது தமிழ்பள்ளிகளின் தரம் மேலும் உயரும். நமது மாணவர்களின் கல்வித்தரமும் சேர்ந்து உயரும் என நம்பிக்கை தெரிவித்தார் சார்லஸ்.