‘சொற்கள் மலிவானவை. அதுவும் நஜிப் சொல்லும் போது அவை மிக மலிவானவை. அழகாக வடிவமைக்கப்பட்ட பல சுலோகங்கள் ஏற்கனவே பல முறை பூஜ்யமாகி விட்டன’
பூமிபுத்ரா கோட்டா முறை கைவிடப்படும் என்கிறார் நஜிப்
பேஸ்: ஆயிரம் மைல்களுக்கான பாதை முதல் அடியில் தான் துவங்குகிறது. ஆனால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விடுத்த பல அறிவிப்புக்களுக்கு ஒரு குழந்தையின் அடி கூட எடுத்து வைக்கப்பட்டிருப்பதை நான் காணவில்லை. விடுக்கப்பட்ட அறிக்கைகள் பின்னர் மறைந்து விடும். அதனால் அந்த யோசனைகள் ‘கருவிலேயே மடிந்த குழந்தைகளாகி விடும்’.
அம்னோ நிலைத்திருப்பதற்கு அவசியமான புரவலர் முறைக்கு முரணாக நஜிப் விடுக்கும் அரசியல் ரீதியான அறிக்கைகளை நான் நம்பவில்லை.
அம்னோ ஜமீன்களுக்கு எதிராக நீங்கள் நிற்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆகவே நான் உங்களையும் அம்னோ/பிஎன்-னையும் இனிமேல் நம்ப மாட்டேன்.
அபாஸிர்: நஜிப் நம்பகத்தன்மை பிரச்னையை சொந்தமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் பல முறை ‘புலி வருது, புலி வருது’ எனச் சொல்லி விட்டார். அவர் அர்த்தமற்ற அறிவிப்புக்களை நம்பிக் கொண்டிருக்கிறார். தாம் ‘மறு தோற்றம்’ பெற்றுள்ளதாகக் காட்டிக் கொள்ள பல அவதாரங்கள் எடுத்து விட்டார்.
அவர் தாம் சொல்வதையே செய்வதில்லை. (அன்வாரை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயார் என அவர் வாக்குறுதி அளித்ததைப் போல)
இப்போது யாரும் அவர் சொல்வதைக் கடுமையாக எடுத்துக் கொள்வதில்லை. அம்னோ அடி நிலையில் உள்ளவர்கள் கூட.
உங்கள் அடிச்சுவட்டில்: இது வரையில் புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் ‘புத்திசாலி பூமிபுத்ராக்களுக்கு’ அல்ல என்பதை கடைசியாக நீங்கள் ஒப்புக் கொண்டு விட்டீர்கள். எனவே இது வரை புதிய பொருளாதாரக் கொள்கை ‘உங்களுக்கு யாரைத் தெரியும்’ என்ற அடிப்படையில் அமலாக்கப்பட்டது. அறிவாற்றல் அடிப்படையில் அல்ல.
கடந்த 40 ஆண்டுகளாக அந்த பூமி பயன்கள் அனைத்தையும் யார் உறிஞ்சிக் கொண்டார்கள் என நீங்கள் எங்களுக்குக் கூற முடியுமா ? எடுத்துக் கொண்ட சகாயங்களை திரும்ப ஒப்படைக்குமாறு அவர்களை நீங்கள் கேட்க முடியுமா ?
அந்தப் பண்பாடு வேரூன்றி விட்டதால் பூமிபுத்ரா அல்லாத வணிகர்கள் கூட ‘அறிவாற்றலை’ காட்டிலும் ‘யாரைத் தெரியும்’ என்னும் அதிகம் நம்பத் தொடங்கியுள்ளனர்.
உற்பத்தித் திறனை அடித்தளமாகக் கொண்ட வளர்ச்சியையும் உயர்ந்த வருமானத்தைக் கொண்ட பொருளாதாரத்தையும் நாம் எப்படி எதிர்பார்க்க முடியும். என் நண்பர்களே கனவு காணுங்கள்.
கேகன்: “கால ஒட்டத்தில்” என்பது எப்போது ? நீங்கள் பெர்க்காசாவைக் கண்டு அஞ்சுகின்றீர்கள். உங்களால் ஒரு குழந்தை அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.
பொருளாதார உருமாற்றத் திட்டங்கள் இன்னொரு புதிய பொருளாதாரக் கொள்கையாக குறைக்கப்பட்டு விட்டன. இன்னும் 50 ஆண்டுகளுக்கு அம்னோ ஆட்சி செய்யுமானால் பூமி கோட்டா இருக்கும் என நான் பந்தயம் கட்ட முடியும். அதை விட மோசமாகக் கூட இருக்கலாம்..
லூயிஸ்: சொற்கள் மலிவானவை. அதுவும் நஜிப் சொல்லும் போது அவை மிக மலிவானவை. அழகாக வடிவமைக்கப்பட்ட பல சுலோகங்கள் ஏற்கனவே பல முறை பூஜ்யமாகி விட்டன.
இப்போது வாக்குகளை கவருவதற்காக துணிச்சலான சுலோகம் ஒன்றை முழங்கியுள்ளார். ஆனால் அது தேர்தல் தந்திரம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இப்ராஹிம் அலி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வரை காத்திருங்கள். தாம் சொல்லியது தவறாக கையாளப்பட்டு விட்டது என நஜிப் அடுத்து அறிக்கை விடுவார்.
பங்குகளில் வழங்கப்படும் 30 விழுக்காடு கோட்டா அம்னோபுத்ராக்களின் பைகளுக்கே செல்கிறது. தேவைப்படும் பூமிக்களுக்கு அது கிடைப்பதில்லை.
அப்படி பூமி எதிர்ப்பு ஏதும் இருந்தால் அது அம்னோபுத்ராக்கள் காட்டும் எதிர்ப்பாகவே இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஏழையாக உள்ள பூமிக்களுக்கு அதனால் எந்தத் தாக்கமும் இல்லை.
தெளிந்த நீர்: நீங்கள் பூமி தொழில் முனைவர்களை உருவாக்க விரும்பினால் அடி நிலையிலிருந்து தொடங்குங்கள். இலவச சவாரிகள் இல்லை. ஊன்று கோலும் இல்லை. குறுக்கு வழி இல்லை. காரணங்களும் இல்லை.
கடின உழைப்பு, சிக்கனம், விடா முயற்சி, தகுதி அடிப்படையில் வெற்றி பெறும் ஆர்வம் ஆகிய பண்புகளை ஊட்டுங்கள். சவால்களை திறமையைக் கொண்டு சமாளியுங்கள். அந்தப் பண்புகளை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கொண்டு செல்லுங்கள். அப்போது தான் உங்களுக்கு வெற்றி கிட்டும்.
சந்திரன்: பேசுவது எளிது. நாங்கள் மகிழ்ச்சியில் குதிக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா ? தயவு செய்து மலேசியர்களுடைய அறிவாற்றலைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.