நஜிப், ரோஸ்மா வழக்குரைஞர்கள் புகார் செய்தனர்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர் ஆகியோருக்கான வழக்குரைஞர்கள், சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளும் சபினாவைத் தள்ளி வைப்பதற்கு தங்களது கட்சிக்காரர்கள் சமர்பித்துள்ள விண்ணப்பம் மீது வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியாவிடம் இன்று அதிகாரப்பூர்வமாகப் புகார் செய்துள்ளனர்.

நீதிபதியிடம் அவருடைய அறையில் அது குறித்து தெரிவித்ததாக வழக்குரைஞர் சாலேஹுடின் சைடின் கூறினார்.

“நீதிமன்றத்தில் வெளியிடப்படும் வரையில் விண்ணப்பத்தின் உள்ளடக்கத்தை தெரிவிக்க வேண்டாம் என எங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது. ஆகவே அது வரையில் நாங்கள் அவற்றை வெளியிடக் கூடாது.”

“அந்த விண்ணப்பங்கள் மற்றும் அபிடவிட்களின் உள்ளடக்கம் ஊடகங்களுக்கு எப்படிக் கிடைத்து அவற்றை வெளியிட்டுள்ளன என்பது எங்களுக்குத் தெரியவில்லை.”

இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் சாலேஹிடின் நிருபர்களிடம் அதனைத் தெரிவித்தார்.

அன்வார் இப்ராஹிமின் பதில் அபிடவிட், தொலைநகல் வழி தங்களுக்கு நேற்று மாலை கிடைத்ததாகவும் இன்று சீல் வைக்கப்பட்ட பிரதி வழங்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

“எனவே அன்வாருடைய அபிடவிட்டுக்குப் பதில் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பது மீது நாங்கள் எங்கள் கட்சிக்காரர்களின் உத்தரவை நாடுவோம்,” என்றார் அவர்.

அதற்கு முன்னர் நஜிப்பையும் ரோஸ்மாவையும் பிரதிநிதிக்கும் இன்னொரு வழக்குரைஞரான காஸி இஷாக், அந்த விஷயத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தமது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை 2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி தேசா டமன்சாரா ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதியில் குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக 64 வயதான அன்வார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.