இந்திய இசி:தரக்குறைவான மையைத்தான் அகற்ற முடியும்

வாக்காளர்களிடம் பயன்படுத்தப்படும் அழியா மை எளிதில் “அகற்றப்படுகிறது” என்றால் தரக்குறைவான  மை பயன்படுத்தப்படுவதுதான் அதற்குக் காரணமாகும் என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் அதுதான் நடந்தது என்று மலேசியாகினியின் கேள்விகளுக்கு இந்திய இசி செயலாளர் கே.என்.பார் மின்னஞ்சல்வழி அனுப்பிய பதிலில் குறிப்பிட்டிருந்தார். அதன்பின் மை தயாரிப்பாளர்களான மைசூர் பேய்ண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்(எம்பிஎல்வி)டுக்குக் “கடுமையாக” உத்தரவிட்டு அக்குறை சரிசெய்யப்பட்டது என்றாரவர்.

“தரக்குறைவான மைதான் அதற்கு முக்கிய காரணம். மையின் தரம் குறையக்கூடாது என்று எம்பிவிஎல்லிடம் எச்சரிக்கப்பட்டது.

“அதன்பின் புகார் எதுவும் வரவில்லை.ஒருவர் பலதடவை வாக்களிப்பதைத் தடுக்க இந்த மை பெரிதும் உதவுகிறது”.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, 1951 தொடங்கி  அழியா மையைத் தேர்தல்களில் பயன்படுத்தி வருகிறது என்று பார் கூறினார். 

இம்மாதத் தொடக்கத்தில் உள்நாட்டு ஆங்கில செய்தித்தாளான த ஸ்டார்,  கடைகளில் வாங்கக்கூடிய கறைநீக்கிகளைக்கொண்டு வாக்காளர்களின் விரலில் தடவப்படும் அழியா மையை எளிதில் அகற்ற முடியும் என்பதை ஐரோப்பிய நிறுவனமொன்று செய்துகாட்டியது என்று அறிவித்தது.

அத்துடன், 2004 ஆப்கான் அதிபர் தேர்தலின்போது, இரண்டு வேட்பாளர்கள் அழியா மையை அகற்ற முடிகிறது என்று புகார் செய்திருந்ததாகவும் அது குறிப்பிட்டது.

அதனைத் தொடர்ந்து த டைம்ஸ் ஆன்லைன், வாக்காளர்கள் பலர் வெளுப்பான்களையும் கரைப்பான்களையும் பயன்படுத்தி மையை அகற்ற முனைந்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள் என்று அறிவித்திருந்தது.

தேர்தல் அதிகாரிகள் தவறான மையைப் பயன்படுத்தினர்
இது பற்றிக் கருத்துரைத்த பார், ஆப்கானிஸ்தானில் தேர்தல் அதிகாரிகள் தவறுதலாக கருப்புமையைப் பயன்படுத்தி விட்டார்கள் என்றார். அது, வாக்குச் சீட்டுகளுக்கு அடையாளமிடப் பயன்படுவது.

“ஆப்கானிஸ்தான் தேர்தல் அதிகாரி ஒருவர் இந்திய இசி-க்கு அதைத் தெரியப்படுத்தினார்.

“சில வாக்குப்பதிவு மையங்களில், அழியா மைக்குப் பதிலாக,  வாக்குச் சீட்டுகளுக்கு அடையாளமிட வைத்திருந்த சாதாரண மையை வாக்காளர்களின் விரல்களில் தடவி விட்டார்கள்”.

ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்டதும் எம்விபிஎல் தயாரித்த மைதான். இந்திய அரசாங்கம்தான் அதை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது என்று பார் கூறினார்.

த ஸ்டாரின் செய்திஅறிக்கையில், அழியா மையில் சில்வர் நைட்ரேட் இருப்பது உடல்நலனுக்குக் கேடு செய்யும் என்று பெயர்குறிப்பிடப்படாத அந்த ஐரோப்பிய நிறுவனம் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அழியா மையில் உள்ள சில்வர் நைட்ரேட்டின் அளவு நான்கு விழுக்காடுதான் என்றும் அது உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்கும் அளவுக்கு உட்பட்டதுதான் என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ஏசியன் நெட்வோர்க் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

அது சரிதான் என்று ஒப்புக்கொண்ட பார், அழியா மையில் “உடல்நலனுக்குக் கேடு செய்யும் எதுவும் இல்லை”, என்றார்.அது அரிப்பை ஏற்படுத்துவதுமில்லை.

தேர்தல்களில் அழியா மை பயன்படுத்தப்பட வேண்டும் என்பது பெர்சே 2.0, முன்வைத்துள்ள எட்டுக் கோரிக்கைகளில் ஒன்றாகும்.

மலேசியாவின் 13வது பொதுத் தேர்தலில், அழியா மையைப் பயன்படுத்துவதா கைரேகைகளைப் பதிவுசெய்வதா அல்லது இரண்டையுமே பயன்படுத்துவதா என்று பின்னர் முடிவு செய்யப்படும் என்று இசி கூறியுள்ளது.