குவான் எங்: சிங்கப்பூர் பேச்சு,அது ஒரு தனிப்பட்ட உரையாடல்

அண்மைய சிங்கப்பூர் பயணத்தின்போது ஜோகூர் பற்றித் தரக்குறைவாகப் பேசினார் என்று கூறப்படுவதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் ஒத்துக்கொள்ளவுமில்லை, மறுக்கவும் இல்லை.

இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், அவ்விவகாரம் எழுப்பப்பட்டபோது அதற்குப் பதில் அளிக்குமுன், டிவி3 செய்தியாளரை அங்கிருந்து வெளியேறுமாறு அவர் பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

தம் பேச்சின் வீடியோ பதிவை அரசுத்தொடர்புடைய தொலைக்காட்சி நிலையங்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் மற்ற செய்தியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.தாம் என்ன சொன்னாலும் அதை அவை திரித்துக்கூறும் என்றவர் அஞ்சுகிறார்.

“இவ்விவகாரத்தில் நான் சொல்லும் விசயங்கள் திரித்துக்கூறப்படுவதை விரும்பவில்லை. முன்பு அப்படி நிகழ்ந்ததுண்டு”, என்று லிம் கூறினார்.

டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், சிங்கப்பூரில் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் 20 பேருடன் தனிப்பட்ட விருந்து ஒன்றில் கலந்துகொண்டதாகவும் விருந்துக்குப் பின்னர் தம் உரையின் பிரதிகள் செய்தியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

தயாரிக்கப்பட்ட அந்த உரையில், எந்த இடத்திலும் ஜோகூர் பற்றியோ அங்கு நிலவும் குற்றச்செயல்கள் பற்றியோ குறிப்பிடப்படவில்லை என்றாரவர்.

ஆனால், டிவி3-இன், பிரதான செய்தி அறிக்கையில் இடம்பெற்ற ஓர் ஒலிப்பதிவில்  ஜோகூரில் நிலவும் குற்றச்செயல்களை இகழ்ந்துரைப்பதுபோல்  அவர் பேசுவது ஒலியேறியதே என்று சுட்டிக்காட்டியதற்கு எந்த இடத்தில் அவ்வாறு பேசப்பட்டது என்பதைச் சரிபார்க்க வேண்டியுள்ளது என்றார்.

“அப்படி நான் பேசி இருந்தால் எப்படிப்பட்ட சூழலில் பேசினேன் என்பதைப் பார்க்க வேண்டும்….அது தனிப்பட்ட உரையாடலாகும்”, என்றாரவர்.

தாம் சுராபாயாவில் இருந்தபோதே இவ்விவகாரம் பெரிதாக்கிப் பேசப்பட்டது என்றும் அதற்குப் பதில் அறிக்கை ஒன்றை தம் பத்திரிகைச் செயலாளர்  வோங் கிம் ஃபெய் மூலமாக வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.அந்த அறிக்கையில் அவர் “பாரிசான் நேசனல் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களின் பாட்டுக்கேற்ப  நடனமாட முடியாது” என்று கூறியிருந்தார்.

‘என் கவனத்தைத் திசைதிருப்ப முயல்கிறார்கள்’

இப்போது அம்னோ தொடர்புடைய உத்துசான் மலேசியாவுக்கு எதிராக  வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். அவர் புதிய பொருளாதாரக் கொள்கையை ஒழிக்க விரும்புகிறார் என்று குறிப்பிட்டு அதில் வெளிவந்த ஒரு கட்டுரை தொடர்பில் அதற்கு எதிராக லிம் வழக்கு தொடுத்துள்ளார்.

“என் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டும். நான் களைத்துப்போக வேண்டும்.அதுதான் அவர்களின் விருப்பம். இப்போது அம்னோ தொடர்புடைய உத்துசான் மலேசியாவுக்கு எதிராக ஒரு வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.அதுவே நேரத்தையெல்லாம் எடுத்துக்கொள்கிறது”, என்றாரவர்.

“ஆனால், அவர்களை விடப்போவதில்லை. ….விட்டால் இந்த ஆட்டத்தைக் கைவிட மாட்டார்கள்”.

தாம் வெளிநாடுகளில் பேசியதையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு குறைகூறத் தொடங்கியுள்ளனர் என்று கூறியவர் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் நடத்திய நேர்காணலிலிருந்து இது தொடங்கியது என்றார்.

அந்த நேர்காணலில் ஜோகூர் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதற்கு ஆதாரங்களைக் காட்டி அறிக்கை விட்டபோது உள்நாட்டு ஊடகங்கள் அந்த அறிக்கையைத் திரித்து வெளியிட்டன. .

இப்போது  சிங்கப்பூர் பேச்சு குறித்து விளக்கமளித்து அறிக்கை விடுத்தால் மற்ற வெளிநாட்டுப் பயணங்களை எடுத்துக்கொண்டு குற்றம்குறை சொல்லத் தொடங்குவார்கள் என்றாரவர்.

“ஆஸ்திரேலியாவில் தொடங்கியவர்கள் சீனா, ஹாங்காங், சுராபாயா என்று பாய்வார்கள்.

“ஒவ்வொன்றாகக் கவனிப்போம். முதலில் தேசிய செய்தி நிறுவனமான பெர்னாவிலிருந்து தொடங்குவோம்.

“எங்கள் கடிதத்துக்கு அது பதில் அளிக்கவில்லை என்றால், தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு வழக்குரைஞர்களைப் பணிப்பேன்”, என்று லிம் கூறினார்.

செப்டம்பர் 23 பெர்னாமா செய்தி அறிக்கை ஒன்று, பினாங்கைப் போல் அல்லாமல் ஜோகூர் பாதுகாப்புள்ள மாநிலம் அல்லவென்றும் அங்கு கடத்தலெல்லாம் சாதாரணமாக நடக்கிறது என்றும் அவர் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தது.

அந்த அறிக்கை கண்டு ஆத்திரமடைந்த ஜோகூர்காரரான துணைப் பிரதமர் முகைதின் யாசின், லிம் ஜோகூர் முதலீடு செய்வதற்குப் பொருத்தமற்ற  மாநிலம் என்று கூறி கீழறுப்புச் செய்கிறார் என்று குறிப்பிட்டார்.

பினாங்குக்கு முதலீடுகள் தேடுவதற்காக அவர் மற்ற மாநிலங்களை இழித்துரைக்கிறார் என்று மற்ற பிஎன் தலைவர்களும் லிம்மீது பாய்ந்தனர்.அவ்வாறு இழிவாகப் பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.