நெகிரி செம்பிலான் மாநிலத்தில் எந்த ஒரு சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அந்த மாநில பெர்க்காசா மருட்டியுள்ளது.
புக்கிட் கெப்போங் சம்பவம் மீது தாம் விடுத்த அறிக்கை தொடர்பில் மாட் சாபு மன்னிப்புக் கேட்காவிட்டால் அத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்குத் தாம் நேரடியாக தலைமை தாங்கப் போவதாக மாநில பெர்க்காசா தலைவர் முகமட் நூர் நோர்டின் அப்துல்லா கூறினார்.
“மாட் சாபுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நிகழும் என நான் உத்தரவாதம் அளிக்கிறேன். அந்த ஆர்ப்பாட்டங்களில் மாநில பெர்க்காசா மட்டும் பங்கு கொள்ளாது. மாட் சாபு அறிக்கை மீது ஏமாற்றம் அடைந்துள்ள மற்ற அரசு சாரா அமைப்புக்களும் அதில் கலந்து கொள்ளும்,” என அவர் சொன்னதாக சினார் ஹரியான் நாளேடு கூறியது.
கடந்த சனிக்கிழமையன்று சிரம்பானில் மாட் சாபு கலந்து கொண்ட சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் கைகலப்பு நிகழ்ந்துள்ளதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் பெர்க்காசா அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அப்போது சொற்பொழிவு நிகழும் இடத்தை நோக்கி பெர்க்காசா ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறுவதை தடுக்க பாஸ் ஆதரவாளர்கள் முயன்ற போது மூண்ட கைகலப்பில் இரண்டு பாஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
1950ம் ஆண்டு புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட கிளர்ச்சித் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய முகமட் இந்ராவை சுதந்தரப் போராளி என மாட் சாபு ஆகஸ்ட் 21ம் தேதி ஆற்றிய உரையில் பாராட்டிய பின்னர் சர்ச்சை மூண்டது.
மாட் சாபு அறிக்கை நாட்டின் சுதந்திர வரலாறு பற்றி வாக்குவாதத்தையும் கிளப்பி விட்டுள்ளது. புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தில் பணியாற்றியவர்கள், அந்த நேரத்தில் பிரிட்டிஷ் மகுடத்திற்கு சேவை ஆற்றியதாக மாட் சாபு தமது கருத்துக்கு நியாயம் கற்பித்தார்.
‘பெர்க்காசா நிலைமையை பெரிதுபடுத்த விரும்புகிறது’
சனிக்கிழமை நிகழ்ந்த வன்முறை பற்றிக் குறிப்பிட்ட பாஸ் இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ரிடுவான் முகமட் நோர், பெர்க்காசா நிலைமையை ஊதி பெரிதாக்குவதற்கு முயலுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
“அன்றைய தினம் தனது உறுப்பினர்கள் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதற்கு பெர்க்காசா வேண்டுமென்றே அனுமதித்தது. பாஸ் ஆதரவாளர்களிடமிருந்து பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக பெர்க்காசா நிலைமையை கடுமையாக்கியது.”
“வாதங்களை வாதங்கள் மூலமே எதிர்கொள்ள வேண்டும். வன்முறையால் அல்ல,” என ரிடுவான் வலியுறுத்தினார்.
“பாஸ் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு செய்வதும் பாஸ் ஆதரவாளர்களைத் தாக்குவதும் உண்மையை அறிந்து கொள்ள விரும்பாதவர்கள் மேற்கொள்ளும் கோழைத்தனமான நடவடிக்கைகள் என பாஸ் வலியுறுத்துகிறது.”