இசா சட்டத்தை மறுபிரதி எடுக்க வேண்டாம் என்கிறது பேராசிரியர்கள் மன்றம்

இசா சட்டத்துக்கு மாற்றுச் சட்டம் தயாரிக்கப்படும் போது, பெரிதும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள அந்தச் சட்டத்தின் உணர்வுகளையும் நடைமுறைகளையும் மறுபிரதி எடுக்க வேண்டாம்  என மூத்த கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தேசியப் பேராசிரியர்கள் மன்றத்தின் ஆளுமை, சட்ட, பொது நிர்வாகப் பிரிவுக்கு தலைமையேற்றுள்ள பேராசிரியர் நிக் அகமட் கமால் அவ்வாறு கூறியுள்ளார். தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தனக்கு உள்ள உரிமையையும் தனிநபர்களுடைய உரிமைகளையும் அரசாங்கம் சமநிலைப்படுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

“இசா-வுக்கு மாற்றாக அமையும் உத்தேசச் சட்டங்கள், அமெரிக்காவின் விசுவாசச் சட்டம், பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றைக் காட்டிலும் மிகவும் சரளமாக இருக்க வேண்டும்.”

“தனிநபர்களை கட்டுப்படுத்துவதில் மிகவும் கடுமையாக இருக்கும் அமெரிக்க, பிரிட்டிஷ் சட்டங்களை உள்நாட்டு, பொது ஒழுங்கை கவனிக்கும் சட்டங்கள் பின்பற்றக் கூடாது என நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் நிக் அகமட்.

“அந்தச் சட்டங்கள் இசா-வையும் பின்பற்றக் கூடாது,” என அவர் நிருபர்களிடம் கூறினார்.

நாடு முழுவதிலும் உள்ள உயர் கல்விக் கூடங்களி பணியாற்ரும் 1,600க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அந்த மன்றத்தில் அங்கம் பெற்றுள்ளனர்.

இசா சட்டம், கம்யூனிஸ்ட்களையும் பயங்கரவாத மருட்டல்களையும் கட்டுப்படுத்தும் தொடக்க நோக்கத்திலிருந்து விலகி தனி நபர்கள் மீதும் அது பயன்படுத்தப்பட்டதை நிக் அகமட் சுட்டிக் காட்டினார்.

தனி நபர் உரிமைகளுக்கு முன்னுரிமை

விசாரணையின்றி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருவரைத் தடுத்து வைக்க வகை செய்யும் விதியை புதிய சட்டங்களில் சேர்ப்பது குறித்து அரசாங்கம் தீவிரமாக மறு ஆய்வு செய்வது நல்லது என்றும் நிக் அகமட் சொன்னார். இசா-வுக்கு பெரும் எதிர்ப்புக் காட்டப்படுவதற்கு அந்த விதிமுறையே காரணம் என அவர் குறிப்பிட்டார்.

அவர் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையில் ஒர் உறுப்பினரும் ஆவார்.

விசாரணையின்றி தடுத்து வைப்பதற்கு கூட்டரசு அரசியலமைப்பின் 149வது பிரிவு அனுமதி அளித்தாலும் அரசாங்கம் தன் விருப்பம் போல் யாரையும் தடுத்து வைக்கலாம் என்பது அதன் பொருள் அல்ல என்றும் நிக் அகமட் குறிப்பிட்டர்.

தமது கருத்துக்கள் முழுமையான தேசியப் பேராசிரியர்கள் மன்றத்தின் எண்ணங்கள் அல்ல என்றும் தாம் தலைமை தாங்கும் பிரிவின் கருத்துக்கள் எனவும் அவர் சொன்னார்.

இசா சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சருக்குக் கொடுக்கப்பட்டுள்ள விரிவான அதிகாரங்களையும் புதிய சட்டங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என நிக் அகமட் விரும்புகிறார்.

தடுப்புக் காவல் 21 நாட்களுக்கு மேல் போகக் கூடாது என்றும் கைதிகளுக்கு சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“புதிய சட்டங்கள் வரையப்படும் போது கருத்துக்களை வழங்குவதற்கு அரசாங்கம் எங்களை அழைக்கும் என நாங்கள் நம்புகிறோம்.  எங்கள் எண்ணங்களை தெரிவிக்கவும் புதிய சட்டங்களை வரையும் குழுவில் இடம் பெறவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் அவர்.