பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று காலை இருதய நோய் காரணமாக மரணமடைந்த தமது வாகனப் பாதுகாவலர் இப்ராஹிம் மாட் ஹுசேனுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
தாமான் கிராமாட்டில் 51 வயதான இப்ராஹிமின் நல்லுடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அஸ்-சாஆடா சூராவுக்கு காலை பத்து மணி வாக்கில் பிரதமர் சென்றார். அங்கு தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாரும் இருந்தார்.
சுவாசிப்பதற்கு சிரமமாக இருப்பதாக இப்ராஹிம் கூறிய பின்னர் அவர் காலை மணி 6.40 வாக்கில் கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் காலை மணி 7.30க்குக் காலமானார்.
டாக்டர் மகாதீர் முகமட் பிரதமர் பதவியிலிருந்து ஒய்வு பெறும் வரையில் அவருக்கு வாகனப் பாதுகாவலராக இப்ராஹிம் பணியாற்றி வந்தார்.
அதற்கு பின்னர் புடுவில் உள்ள போக்குவரத்துக்குப் பிரிவுக்கு திரும்பிய அவர் 2009ம் ஆண்டு நஜிப்பின் வாகன அணியில் இணைந்தார்.
இப்ராஹிமுக்கு பாக்ரியா அப்துல் ராவ்ப் என்ற மனைவியும் 14 வயதுக்கும் 19 வயதுக்கும் உட்பட்ட மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர்.
இப்ராஹிமின் நல்லுடல் அடக்கம் செய்யப்படுவதற்காக பேராக், பாரிட் புந்தாரில் உள்ள சுங்கை கோத்தா கம்போங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
பெர்னாமா