இந்தோனிசியா நான்கு நாடுகளுக்கு மட்டுமே வீட்டு உதவியாளர்களை அனுப்பும்

இந்தோனிசியாவிலிருந்து நான்கு நாடுகளுக்கு மட்டுமே வீட்டு உதவியாளர்களை அனுப்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதிக்கும். சவூதி அரேபியா, மலேசியா, ஹாங்காங், தைவான் ஆகியவையே அந்த நாடுகள் ஆகும். அந்த நாட்டின் மனித ஆற்றல் குடிபெயர்வு அமைச்சின் அதிகாரி ஒருவர் அந்தத் தகவலை வெளியிட்டார்.

“இந்தோனிசிய வீட்டு உதவியாளர்கள் அனுப்பப்படும் நாடுகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் அவர்களை அனுப்புவதற்கு நான்கு நாடுகள் மட்டுமே உகந்தவை என வகைப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்,” என அந்த அமைச்சின் தொழிலாளர் சேர்ப்புப் பிரிவின் தலைமை இயக்குநர் ரெய்னா உஸ்மான் கூறியதாக அந்தாரா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தோனிசியாவிலிருந்து வீட்டு உதவியாளர்கள் அனுப்பப்படும் நாடுகளின் குடிநுழைவுத் தொழிலாளர் பாதுகாப்புக் கொள்கைகள்,  அத்தகைய தொழிலாளர்களின் உரிமைகள் ஆகியவற்றை அமைச்சு ஆய்வு செய்த பின்னர் அவர்கள் அனுப்பப்படும் நாடுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

குறிப்பிட்ட நிபந்தனைகளையும் வழிகளையும் கொண்டிராத நாடுகளுக்கு வீட்டு உதவியாளர்கள் அனுப்பப்படுவதை அரசாங்கம் இனிமேல் அனுமதிக்காது என்றும் அவர் சொன்னார்.

இந்தோனிசிய வீட்டு உதவியாளர்களுக்கு முக்கிய இலக்காக மலேசியா திகழ்வதாகவும் அவர் சொன்னார். அதற்கு மொழியும் பண்பாடும் ஒரே மாதிரியாக இருப்பதே காரணம் ஆகும்.

மலேசியாவைப் பொறுத்த வரையில் வீட்டு உதவியாளர்களின் தரத்தை உயர்த்தவும் முதலாளிகள் தேர்வை கடுமையாக்கவும் அரசாங்கம் திட்டமிடுவதாக ரெய்னா உஸ்மான் குறிப்பிட்டார்.

“மலேசியாவுடன் நாங்கள் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கூட்டுப் பணிக் குழு கண்காணிக்கும்.  மலேசியாவில் வேலை செய்யும் இந்தோனிசிய குடிநுழைவுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு அந்த ஆவணம் வகை செய்கிறது.”

பெர்னாமா