பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு மன்னிப்பு கேட்காவிட்டால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடரப்போவதாக நெகிரி செம்பிலான் பெர்க்காசா விடுத்துள்ள எச்சரிக்கையை அவர் ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்.
அதற்குப் பதில் கட்சியின் ‘சண்டைக் கோழி’ எனக் கருதப்படும் அந்த அரசியல்வாதி அழைக்கப்பட்டால் நெகிரி செம்பிலான் முழுவதும் நிகழ்ச்சிகளில் பேசுவதற்குத் தயாராக இருக்கிறார்.
“நான் அந்த எச்சரிக்கை குறித்து மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளேன். உண்மையில் பெர்க்காசா தான் அதிகமாக பரபரப்பு அடைந்துள்ளது. என் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகவே நீதிமன்ற முடிவுக்காக காத்திருப்போம்.”
“ஆனால் நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு அழைக்கப்பட்டல் நான் போவேன்,” எனக் குறிப்பிட்ட மாட் சாபு, நெகிரி செம்பிலானில் தமது அடுத்த சொற்பொழிவுக்கு பாரோயில் அக்டோபர் 6ம் தேதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
புக்கிட் கெப்போங் சம்பவம் மீது தாம் விடுத்த அறிக்கை தொடர்பில் மாட் சாபு மன்னிப்புக் கேட்காவிட்டால் அத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்குத் தாம் நேரடியாக தலைமை தாங்கப் போவதாக மாநில பெர்க்காசா தலைவர் முகமட் நூர் நோர்டின் அப்துல்லா எச்சரித்திருந்தார்.
1950ம் ஆண்டு புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட கிளர்ச்சித் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய முகமட் இந்ராவை உண்மையான சுதந்தரப் போராளி என மாட் சாபு ஆகஸ்ட் 21ம் தேதி ஆற்றிய உரையில் பாராட்டியதாக கூறப்படுவது தொடர்பில் அவருக்கு எதிராக கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டு இம்மாதத் தொடக்கத்தில் சுமத்தப்பட்டது.
போலீசார் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும்
கடந்த சனிக்கிழமையன்று சிரம்பான் அம்பாங்கானில் அந்த பாஸ் தலைவர் பேசிக் கொண்டிருந்த மேடையை நோக்கி முன்னேற பெர்க்காசா ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்ற போது ஏற்பட்ட மோதலில் இரண்டு பாஸ் ஆதரவாளர்கள் காயமடைந்தனர். தனது உறுப்பினர் ஒருவர் காயமுற்றதாக பெர்க்காசாவும் கூறிக் கொண்டது.
எதிர்வரும் நிகழ்வுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்ட மாட் சாபு, அனுமதி தேவை இல்லாத தனியார் இடங்கள் உட்பட நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் ஒழுங்கை நிலை நிறுத்தும் பொறுப்பைப் போலீசாரிடமே விட்டு விடுவதாகச் சொன்னார்.
இதனிடையே பெர்க்காசா விடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட எச்சரிக்கை மீது நெகிரி செம்பிலான் பாஸ், பாரோய் போலீஸ் நிலையத்தில் இன்று காலை புகார் செய்துள்ளது.
அந்த எச்சரிக்கை பேச்சுச் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ள கூட்டரசு அரசியலமைப்பின் 10வது விதிக்கு முரணாக அமைந்துள்ளது என அந்தப் புகாரில் பாஸ் குறிப்பிட்டுள்லது.
“போலீசார் அந்த விவகாரத்தை புலனாய்வு செய்வதோடு, அம்பாங்கானில் நிகழ்ந்த வன்முறை மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்,” என நெகிரி செம்பிலான் பாஸ் ஆணையாளர் முகமட் தாவ்பிக் அப்துல் கனி கூறினார்.