வாக்காளராக பதியும் ஒருவரின் தகவல் மாறுபடுவது எப்படி? சார்ல்ஸ் கேள்வி

கிள்ளானில் வசித்து வரும் சுவா தேக் சான் என்பவரின்  முகவரி வாக்களர் பட்டியலில் மாறுப்பட்டத்தை தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாகிய அந்நபர் கடந்த திங்கட்கிழமை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தில் புகார் செய்துள்ளார்.

அவர் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அதாவது 1996 -ஆம் ஆண்டு  கிள்ளான் பண்டாமாரன் தொகுதியில் புதிய வாக்காளராக பதிந்துக் கொண்டார். அதனை தொடர்ந்து 1999 -ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்க சென்ற போது, அவரின் பெயர் டூசுன் துவா, உலு லாங்காட் நாடாளுமன்றத்தில் இருப்பதாக கூறப்பட்ட போது பெரும் அதிர்ச்சிகுள்ளானதாக அவர் கூறினார்.

அவர் புதிய வாக்காளராக பதியும் போது பண்டாமாரானில் வசித்து வந்தார். அவரது அடையாள அட்டையில் கூட பண்டாமரானின் முகவரி இருக்கும் போது, எப்படி அவரின் பெயர் வேறு ஒரு தொகுதியில் பதியப் பட்டது?

அந்தச் சம்பவத்திற்கு பிறகு அவர் சில அம்னோ அதிகாரிகளின் உதவியை நாடிய போது, அவர்களின் மெத்தனப் போக்கின் காரணத்தால்,  சில குழப்பங்களுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகிய சுவா  இவ்விவகாரத்தை அப்படியே விட்டு விட்டார்.

அன்று நாள் முதல் இன்று வரை அவர் வாக்களிக்காமல் இருப்பதாகவும், ஒரு குடிமகனாகிய அவர் தமது கடையை ஆற்ற முடியவில்லை என வருத்தம் தெரிவித்த சுவா, மேலும் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விசயம் மசீச நடத்திய புதிய வாக்காளர் பதிவில் பதிந்த அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயர்களில் எந்த மாற்றமும் இன்றி உள்ளன.

ஆனால் தாம் ஜசெக நடத்திய பதிவில் பதிந்ததால்தான்  குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது மசீச அரசியல் சதிதான் என அவர்  ஆணித்தரமாக ஜசெகவின் நீண்ட நாள் ஆதரவாளரான சுவா கூறினார்.

அண்மையில் இது போன்று பல புகார்களை தாம் பெற்று வருவதாக கூறிய கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, வாக்காளராகப் பதியும் ஒருவரின் தகவல் மாறுபடுவது எப்படி என கேள்வி எழுப்பினார். கிடைக்கப் பெற்ற மற்ற சில புகார்கள்  தீர விசாரணைகளுக்கு பிறகு சாட்சியங்களோடு  மக்கள் பார்வைக்கு வெளி கொண்டுவருவோம் என்றார்.

வாக்காளர் உரிமை ஒவ்வொரு மக்களின் தனி உரிமை. அதை அத்து மீறும் இவ்வாறான செயல்கள் கண்டிக்கத்தக்கவை. இந்த விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணையம் முறையான விளக்கம் அளித்ததாக வேண்டும் என கேட்டுக் கொண்ட  சார்ல்ஸ், கிள்ளானில் வாழும் மக்கள் இது போன்று பிரச்சனைகளை சந்திந்தால் தயங்காது தமது சேயை மையத்தின் (03 – 3323 2122 )  உதவியை நாடலாம் என கூறி, இவ்விவகாரத்தை துணிந்து தெரிவித்த சுவாவிற்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார் அவர்.