செய்தி இணையத்தளம் தாஜுடினிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது

மலேசியன் இன்சைடர் என்னும் செய்தி இணையத் தளம், மலேசிய விமான நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகத் தலைவர் தாஜுடின் ராம்லி மீது ஆதாரமற்ற அவதூறான கட்டுரையை வெளியிட்டதற்காக இன்று அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

மலேசியன் இன்சைடர் பெர்ஹாட், அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜஹாபார் சாடிக், நிருபர் ஷாஸ்வான் முஸ்தாபா கமால் ஆகியோர், மன்னிப்புக் கேட்கும் அறிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதி ஹார்மிண்டார் சிங் டாஹ்லிவால் முன்னிலையில் தங்களது வழக்குரைஞர் ஜார்ஜ் மிராண்டா வழியாக தாஜுடினுடைய வழக்குரைஞர் லிம் கியான் லியோங்கிடம் இன்று வழங்கினர்.

அந்த அறிக்கையில் எல்லாத் தரப்புக்களும் கையெழுத்திட்டுள்ளன என்றும் அதில் அடங்கியுள்ள பல நிபந்தனைகளை வெளியிடக் கூடாது என்றும் மிராண்டா நிருபர்களிடம் கூறினார்.

அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தாஜுடினுக்கு ஏற்பட்ட தர்ம சங்கடங்களுக்காகவும் அந்த மூன்று தரப்புக்களும் அந்த மன்னிப்புக் கடிதத்தில் வருத்தம் தெரிவித்துக் கொண்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.

அந்தக் கட்டுரையை மீட்டுக் கொள்ளவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். அத்துடன் அந்தக் கட்டுரை ஆதாரமற்றது. அவதூறானது என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் மிரண்டா கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அந்த செய்தி இணையத் தளத்துக்கு எதிராக தாஜுடின் தொடுத்த 200 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு வெளியில் காணப்பட்டுள்ள தீர்வு அதுவாகும். அந்த வழக்கில் மலேசியன் இன்சைடர் பெர்ஹாட், அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜஹாபார் சாடிக், நிருபர் ஷாஸ்வான் முஸ்தாபா கமால் ஆகியோரை தாஜுடின் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிட்டிருந்தார்.

-பெர்னாமா