‘கைரி அவர்களே, ஹுடுட் மீது நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சியை ஆதரியுங்கள்

கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்க பாஸ் கேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அக்டோபரில் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதின் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என பாஸ் இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த நடவடிக்கையை அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பைத் திருத்துமாறு கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டதின் மூலம் அம்னோ இளைஞர் தலைவருக்கு “புது வாழ்வு” கிடைத்துள்ளதாக பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் ராஜா அகமட் அல் ஹிஸ் கூறினார்.

“அண்மையில் கூடிய பக்காத்தான் தலைவர்கள் எடுத்த முடிவு, ஹுடுட்டை அமலாக்க கிளந்தான் பாஸ் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை நிராகரிக்கவில்லை,” என அவர் சொன்னார்.

“ஹுடுட்டை அமலாக்கும் முடிவு 1993ம் ஆண்டிலேயே எடுக்கப்பட்டது.  ஹுடுட் அமலாக்கத்திற்கு பிஎன் கூட்டரசு அரசாங்கமே தடையாக இருந்து வருகிறது என நாங்கள் கருதுகிறோம்.”

“கிளந்தானில் பாஸ் ஹுடுட்டை அமலக்குவதற்கு உதவியாக கூட்டரசு அரசாங்கம் கூட்டரசு அரசியலமைப்பைத் திருத்த வேண்டிய தேவை இருக்கிறது,” கைரி கூறியதாக மிங்குவான் மலேசியா கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.”

அந்தச் செய்தி, கைரியின் அங்கீகாரமாக பாஸ் இளைஞர் பிரிவு கருதுகிறது. கிளந்தான் பாஸ் விருப்பங்களுக்கு உதவியாக சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என ராஜா அகமட் கேட்டுக் கொண்டார்.

அஸ்ரி குழுவுக்குத் தலைமை தாங்க வேண்டும்

ஹுடுட் அமலாக்கம் மீது விவாதக் குழு ஒன்றை அமைக்க பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் யோசனை தெரிவித்துள்ளார்.

அதற்கு அரசியல் சார்பு இல்லாதவரான முன்னாள் பெர்லிஸ் முப்தி அஸ்ரி ஜைனுல் அபிடின் போன்றவர்கள் தலைமை தாங்கலாம் என அந்தக் கட்சியின் ஆய்வு மய்யம் கூறியுள்ளது.

அஸ்ரி நிகழ்கால இஸ்லாம் மீது பெரிதும் போற்றப்படும் அறிஞர் ஆவார். அத்துடன் மலேசியாவின் நடப்பு அரசியல் விவகாரங்களையும் நன்கு அறிந்துள்ளவர் என அந்த மய்யத்தின் நடவடிக்கை இயக்குநர் ஸுஹ்டி மார்சுக்கி கூறினார்.

அத்தகைய குழு அமைக்கப்படுவதை வரவேற்ற ஸுஹ்டி, அரசாங்கம் அதனை ஏற்றுக் கொண்டு ஹுடுட் மீதான தனது “தடுமாறும்” கொள்கையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.