குற்றவியல் சட்டங்கள் கூட்டரசு நீதிபரிபாலனத்துக்குள் வருகின்றன. மாநிலத்தின் கீழ் அல்ல. ஆகவே மாநிலங்கள் தாங்களாக ஹுடுட் சட்டத்தை அமலாக்க முடியாது என வழக்குரைஞர் மன்றம் கூறுகிறது.
“சட்டம் அதன் இப்போதைய நிலையில் மாநிலங்கள் ஹுடுட்டை அமலாக்குவதை அனுமதிக்கவில்லை”, என வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
1993ம் ஆண்டுக்கான ஷாரியா கிரிமினல் சட்டம் llஐ அமலாக்க மக்கள் அளித்துள்ள அதிகாரத்தைத் தான் பெற்றுள்ளதாக கிளந்தான் கூறிக் கொள்வது பற்றி அவர் கருத்துரைத்தார்.
மாநிலம் இயற்றும் சட்டத்தில் “கூட்டரசு அரசாங்கத்தின் சட்டமியற்றும் அதிகாரங்களுக்கு உட்பட்ட விவகாரங்களை சேர்க்க முடியாது”, என லிம் விளக்கினார்.
“இஸ்லாமிய ஆணைகளுக்கு எதிராக நடந்து கொள்ளும் இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றவர்கள் செய்யும் குற்றங்கள் மற்றும் அத்தகைய குற்றங்களுக்கான தண்டனைகள்” தொடர்பாக மட்டுமே மாநிலம் சட்டங்களை இயற்ற முடியும் என்றார் அவர்.
“அத்துடன் அந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டால் முஸ்லிம்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் கூட்டரசு அரசியலமைப்பின் இரண்டாம் பகுதியில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை சுதந்திரங்களுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும்”, என்றும் லிம் வலியுறுத்தினார்.
“ஹுடுட் என்பது அடிப்படையில் குற்றவியல் சட்டமாகும். குற்றவியல் சட்டம் கூட்டரசு நாடாளுமன்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது.”