சிலாங்கூர் தோட்டப்புறப் பெண்களுக்கு ‘மைக்ரோ கிரடிட்’ கடனுதவி

சிலாங்கூர் மாநில அரசு ஐம்பது இலட்சம் ரிங்கிட் நிதியில் தோட்டப்புறப் பெண்களுக்கான “மைக்ரோ கிரெடிட்” சிறுதொழில் கடனுதவித் திட்டத்தை அமல் செய்யவுள்ளது. தோட்டப்புறப் பெண்களின் வருமானத்தை அதிகரித்து அவர்களை வறுமைப் பிடியிலிருந்து விடுவிக்கும் நோக்கிலான இந்தச் சிறப்பு கடனுதவித் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாக  மாநில  மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராஹிம் தெரிவித்தார்.

இங்கு ஷா அலாமிலுள்ள ஜூப்ளி பேரா மண்டபத்தில் நடத்தப்பட்ட “மாற்றத்திற்காக ஒன்று படுவோம்” என்னும் தலைப்பிலான கருத்தரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் இந்த அறிவிப்பை மந்திரி புசார் வெளியிட்டார். தோட்டப்புற பெண்களுக்கான இந்தச் சிறுதொழில் கடனுதவித் திட்டம் மிம்பார் எனப்படும் நகர்ப்புற ஏழைகளுக்கான சிறுதொழில் கடனுதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் என்று அவர் சொன்னார்.

இது தவிர்த்து தோட்டத் தொழிலாளர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் தோட்டப்புற மாணவர்களுக்கு பஸ் கட்டணம் செலுத்துவதற்காக மாநில அரசு ஓர் இலட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வேலையிடத்தில் சுகாதார பாதிப்பு அபாயத்தை அதிகம் எதிர்நோக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, உதவும் நோக்கில் வாரம் இரு தோட்டங்கள் என்னும் அடிப்படையில்  மாநிலத்திலுள்ள அனைத்து தோட்டங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் காலிட் சொன்னார்.

நியாயமான வாழ்வுக்கு நியாயமான ஊதியம், தரமான சுகாதாரச் சேவை மற்றும் மகப்பேறு சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்தல், ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உறுதி செய்தல், தனித்து வாழும் தாய்மார்களுக்கான உதவிகளை அதிகரித்தல்,  பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுத்தல், தோட்டப்புற பெண்களின் மகப்பேறு உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல், வசிப்பட உரிமை, தலைமைத்துவம் மற்றும் பாலின குழுக்களை உருவாக்குதல் ஆகிய எட்டு பிரகடனங்கள் இந்த கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டன.

ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கருத்தரங்களில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 33 தோட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர். 

இதற்கு மந்திரி புசாருக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர், தோட்டத் தொழிலாளர்கள் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படக்கூடாது என்பதால் இந்த நிதியை நிர்வகிக்கும் பொறுப்பை ஐரின் பெர்னாண்டசை நிர்வாக இயக்குனராகக் கொண்ட தெனாகானித்தா அமைப்பு ஏற்று நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார். 

இனி தோட்டப்புற பெண்கள் எதனையும் எதார்த்தமாக எடுத்துக்கொண்டு கையெழுத்திடாமல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.