பூமி கோட்டா முறை அகற்றப்படும் என நான் சொல்லவில்லை என்கிறார் நஜிப்

பூமிபுத்ரா கோட்டா அகற்றப்படும் எனத் தாம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கருத்தரங்கு ஒன்றில்  கூறவில்லை என்று பிரதமர் நஜிப் அதுல் ரசாக் இன்று விளக்கமளித்துள்ளார்.

ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்ட தகவலுக்கு மாறாக அவரது இன்றைய விளக்கம் அமைந்துள்ளது.

அவர் கோலாலம்பூரில் அம்னோ உச்ச நிலைக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசினார். அதற்குப் பதில் பூமிபுத்ரா தொழில்முனைவர்கள் தன்னிறைவுடன் இயங்க வேண்டும் எனத் தாம் சொல்ல வந்ததாக அவர் சொன்னார்.

“நாங்கள் கோட்டாக்களை அகற்ற விரும்புகிறோம் என நான் கூறவில்லை. ஆனால் நாம் அவர்களை அதிகமாக நம்பியிருக்க முடியாது என நான் சொன்னேன். பூமிபுத்ரா தொழில் முனைவர்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும். நாம் சிறந்த மரியாதைப் பெறுவதற்கு மற்றவர்களுடன் போட்டியிடுவதற்கு கடுமையாக உழைக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.”

“கோட்டாக்கள் அகற்றப்படும் என நான் நிச்சயம் கூறவில்லை,” என்றார் அவர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 2011ம் ஆண்டுக்கான கஸானா மெகாடிரண்ட்ஸ் கருத்தரங்கில் எழுப்பபட்ட கேள்விக்குத் தாம் அளித்த பதிலை நஜிப் தொட்டுப் பேசினார்.

“கோட்டாக்களை அகற்றுவதற்கு” அரசாங்கம் தயாராகி வருகிறது என்றும் ஆனால் நீண்ட கால அடிப்படையில் ‘கெட்டிக்கார” பூமிபுத்ரா தொழில் முனைவர்கள் தங்களுடைய ஆற்றலை உயர்த்திக் கொள்வதற்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் என்றும் அவர் சொன்னதாகக் கூறப்பட்டது.