இசா சட்டம் அடுத்த மார்ச் மாதம் ரத்துச் செய்யப்படும் என்கிறார் பிரதமர்

இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான தீர்மானத்தை அடுத்த மார்ச் மாதத்தில் கூட்டரசு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.

கோலாலம்பூரில் அம்னோ உச்ச மன்றக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இசா-வுக்குப் “பதில்” அறிமுகமாகும் இரண்டு புதிய சட்டங்களை வரைவதற்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

என்றாலும் 1953ம் ஆண்டுக்கான வசிப்பிடக் கட்டுப்பாட்டு சட்டமும் 1959ம் ஆண்டுக்கான அப்புறப்படுத்தும் சட்டமும் ( Banishment Act 1959) அடுத்த வெள்ளிக் கிழமை நாடாளுமன்றம் கூடும் போது ரத்துச் செய்யப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

“அந்தச் சட்டங்களை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை நான் நேரடியாகத் தாக்கல் செய்வேன்,” என்றார் அவர்.

விசாரணையின்றி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அந்த இரண்டு சட்டங்களும் அனுமதிக்கின்றன.
 
1967ம் ஆண்டுக்கான போலீஸ் சட்டத்தின் 27வது பிரிவைத் திருத்துவதற்கான மசோதாக்களை அரசாங்கம் நவம்பர் மாதம் தாக்கல் செய்யும் என்ற தகவலையும் நஜிப் வெளியிட்டார்.

கடந்த புதன் கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த கால அட்டவணை குறித்து விவாதிக்கப்பட்டது.

என்றாலும் மூன்று அவசர காலச் சட்டங்களை அகற்றுவதற்கான காலக் கெடுவும் 1984ம் ஆண்டுக்கான அச்சுக் கூட வெளியீட்டுச் சட்டத் திருத்தம் எப்போது கொண்டு வரப்படும் என்பதும் இன்றைய கால அட்டவணையில் இடம் பெறவில்லை.