தமிழர் ஒற்றுமைக்கு ராமதாஸின் சாதி வெறித்தனம் சவாலாக உள்ளது

ramadoss_indiaமலேசிய மண்ணில் தமிழகத்தின் ‘மக்கள் தொலைக்காட்சி’யின் 10-ஆம் ஆண்டு விழா இன்று (09/01/2013) புதன்கிழமை ஈப்போவில் நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு வருகைதரும் பா.ம.க தலைவரும் மக்கள் தொலைக்காட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸை, உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உன்னிப்பாக அவதானிக்கிறது.

உலகத் தமிழர்களின் ஒற்றுமைக்கு ராமதாஸின் சாதி வெறித்தனம் சவாலாக அமைந்துள்ளதாக கூறுகிறார் உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் இயக்குநர் ம.அ. பொன்ரெங்கன்.

தமிழகத்தில் சாதி விழாக்களை நடத்துவது போன்று மலேசியாவில் நடைபெறுகின்ற, மக்கள் தொலைக்காட்சி விழாவிலோ பிற கூட்டங்களில் சாதி வெறித்தன உணர்வுகளை டாக்டர் ராமதாஸ் பேசக்கூடாது எனக் கண்டித்த பொன்ரெங்கன், வன்னியர் சாதி என்றும் இந்திரன் விழா என்றும் சாதிக்கு ஒரு காடு வெட்டி “செம்பியன்கள்” வேண்டும் என்றும், தமிழர் காட்டில் சாதி அரசியல் நடத்தி வரும் டாக்டர் ராமதாஸ் மலேசியாவிலும் சாதி வெறியைப் பரப்பும் செயலை உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

தமிழர் காட்டை சாதி வழி கூறுபோட்டு தமிழர், தமிழர் நாட்டை மீட்டெடுக்க முடியாத முட்டுக் கட்டையாக பா.ம கட்சி விளங்குகிறது. 10% வன்னியர்களை வைத்தே தமிழக ஆட்சியை அமைக்க முடியும் என்ற தப்பான கணிப்பு தோற்றுப்போய், இப்போது தமிழக அனைத்துச் சாதி கட்சிகளின் வழி அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்து தமிழர்களுக்கு நிரந்திர ஆணி அடிக்கப்போகிறார் போலும்.

Ponranganஎனினும், இவரின் மலேசிய வருகை மக்கள் தொலைக்காட்சி விழாவோடு மட்டும் வைத்துக்கொள்ளக்கோரி உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், அறிக்கை மடல் ஒன்றினை டாக்டர் ராமதாஸுக்கு அனுப்பி உள்ளதாக, பொன்ரெங்கன் செம்பருத்தி இணையத்தளத்திடம் கூறினார்.

ராமதாஸின் வன்னியர் சங்க விழாவுக்குப் பிறகே மலேசியாவில் கடந்த ஐந்தாண்டுகளாக சாதிச் சங்கங்களின் துரோகத்தனம் தலைதூக்கி பல குடும்பங்களில் சமூக சீர்கேடுகளை கொடூரமாக்கியுள்ளது. ராமதாஸ் இக்காலத்தில் புதிய ஆரியர் அட்டகாசம் புரிய புறப்பட்டுள்ளார். திராவிடன் வேண்டாம் என்பது நியாயம். பிராமணியர்களும் ஆரியர்களும் அன்று செய்த சாதி பிளவுகளை இப்போது இவர் திணிப்பது என்ன மருத்துவ நிபுணத்துவமோ? என பொன்ரெங்கன் வினவினார்.

உலகத் தமிழர்களின் மகத்தான பாராட்டை பெற்று வரும் சுத்த தமிழ் தொலைக்காட்சியின் பெருமையை ராமதாஸ் கெடுத்து விடக்கூடாது என கேட்டுக்கொண்ட பொன்ரெங்கன், ஊடக தர்மம் மனித குலத்திற்கு குறிப்பாக உலகத் தமிழர்களின் அறம், பொருள், இன்பம், கடமை, கன்னியம், கட்டுப்பாடுகளுக்கு உரமிட வேண்டுமே தவிர சாதி அரசியல் உசுப்பல்களை கலப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் தொலைக்காட்சி விழா என்பது ஊடக வல்லமை, இன்பமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய சாதியற்ற கொள்கையில் நகர்த்தப்பட வேண்டும் என்றார்.

மக்கள் தொலைக்காட்சி ஊடாக தர்மத்தை தவறாகப் பயன்படுத்தி மலேசியத் தமிழர்களையும், இந்தியர்களையும் சாதிக்கொடுமையில் குழைத்துவிட முடியாது என்பதில் மலேசியாவைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மிக கவனமாக உள்ளதாகவும் செம்பருத்தி இணையத்தளத்திடம், பொன்ரெங்கன் மேலும் கூறினார்.

குறிப்பு : இச்செய்தியில் இடம்பெற்றிருந்த “வேசித்தனம்” என்ற சொல், வாசகர்களின் மனதை புண்படுத்தியிருந்த காரணத்தால், அச்சொல் நீக்கப்படுகிறது.

TAGS: