ஜோகூர், செகாமட்டில் உள்ள புக்கிட் சிபுட், தமன் தாமாய் ஜெயாவில் நேற்று அதிகாலை நிகழ்ந்த பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது இடது காலின் கீழ்ப்பகுதியை இழந்தார்.
நள்ளிரவு 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக செகாமட் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜுமசன்சஹிர் செக் இஸ்மாயில் தெரிவித்தார். காயமடைந்த நபர் உடனடியாக சிகிச்சைக்காக செகாமட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சம்பந்தப்பட்ட நபரின் இடது கால் முழங்காலுக்குக் கீழே துண்டிக்கப்பட்டிருப்பதை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியதாகவும், தற்போது அவரது நிலை சீராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அந்த நபர் தனது வீட்டின் முன் ’16-ஷாட்’ வகை பட்டாசைக் கொளுத்தியதாக நம்பப்படுகிறது.”
உயிருக்கோ அல்லது சொத்துக்களுக்கோ ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெடிப்பை ஏற்படுத்தியதற்காகவும், சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் வெடிபொருட்களை வைத்திருந்ததற்காகவும், 1957 வெடிபொருள் சட்டத்தின் பிரிவுகள் 6 மற்றும் 8-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த இரண்டு பிரிவுகளின் கீழும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 10,000 மலேசிய ரிங்கிட் அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அனைவரும் பட்டாசுகளைத் திறந்தவெளியில் பயன்படுத்துமாறும், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று ஜுமசன்சஹிர் கூறினார்.
-fmt
























