மூத்த குடிமக்கள் எண்மர் இன்னமும் குடியுரிமைக்காகக் காத்திருக்கிறார்கள்

1leeமலாயாவில் சுதந்திரத்துக்குமுன் பிறந்த மூத்த குடிமக்கள் எண்மர், குடியுரிமைக்காகவும் நீலநிற அடையாள அட்டைக்காகவும் இன்னமும் காத்திருக்கிறார்கள்..

பாண்டான் பெர்டானாவில் குடியிருக்கும் அவர்கள் தங்கள் பிரச்னையை டிஏபி-இன் தெராதாய் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஸ் லீ-இடம் கொண்டு சென்றுள்ளனர்.

அவர்களின் நிலை குறித்து மலாய்மொழி நாளேடான சினார் ஹராபானிடம் விவரித்த லீ, அவர்களில் சிலர் 1990-களிலேயே தேசிய பதிவுத்துறையின் நேர்காணலுக்குச் சென்றதாகவும் ஆனால் இதுவரை பலனில்லை என்றும் தெரிவித்தார்.

“அவர்கள் நிலையைக் கண்டு வருந்துகிறேன். அவர்கள் இங்கு பிறந்து, பிறப்புச் சான்றிதழும் வைத்திருக்கிறார்கள். ஆனால், அரசாங்கம் அவர்களுக்குக் குடியுரிமை கொடுக்க மறுப்பதுபோல் தெரிகிறது”, என்றவர் சொன்னார்.

1lee1அவ்விவகாரத்தை உள்துறை அமைச்சுக்குக் கொண்டு செல்லப்போவதாகவும் லீ (இடம்) தெரிவித்தார்.

அண்மையில் குடியேறியவர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் குடியுரிமை எளிதாகக் கிடைத்து விடுகிறது.

ஆனால், எண்மரில் ஒருவரான இங் கியான்,72, 72 ஆண்டுகளாக இந்நாட்டில் வசிக்கிறார். இன்னமும் சிவப்பு அடையாள அட்டைதான் வைத்துள்ளார் என்றவர் சொன்னார்.

“எனக்கு அரசாங்க உதவி கிடைப்பதில்லை. வாக்களிக்கும் உரிமையும் இல்லை”, என்று இங் கூறினார்.

ஆகக் கடைசியாக 2001-இல், விண்ணப்பம் செய்தார். இதுவரை பதில் இல்லை.

எங் சூ லியோங்,70, படிக்கவில்லை என்பதால் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் தெரியவில்லை என்றார். அத்துடன் மலாய் பேசத் தெரியாது என்பதால் என்ஆர்டி நேர்காணலுக்குச் செல்லவும் அஞ்சுகிறார்.

“காலம் பூராவும், என் பிள்ளைகள் வாக்களிக்கச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்குத்தான் அந்த வாய்ப்பு இல்லை.

“கண்ணை மூடுவதற்குமுன் குடியுரிமை கிடைக்கும் என்று நம்புகிறேன்”, என்றார்.