பொய்யான சத்தியப் பிரமாணத்தைப் பயன்படுத்தி ஒர் இந்தியப் பிரஜை மலேசியக் குடிமகனாக்கப்பட்டார்

RCI Sabahஒர் இந்தியப் பிரஜை பொய்யான சத்தியப் பிரமாணத்தைப் பயன்படுத்தி சபா தேசியப் பதிவுத் துறையிடமிருந்து மலேசியக் குடியுரிமையைப் பெற்றதாக இன்று சபா கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நாட்டைச் சேர்ந்த நூர் முகமட் இப்ராஹிம் என்ற அவர், 1981ம் ஆண்டு சபாவுக்குச் சென்றார். ஒர் உணவு விடுதியில் வேலை செய்து கொண்டிருந்த அவரை அவரது சகாக்கள் வற்புறுத்தியதின் பேரில் நீல நிற அடையாளக் கார்டுக்கு விண்ணப்பித்தார்.

பொய்யான சத்தியப் பிரமாணத்தைப் பயன்படுத்தி அவர் செய்த முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

1983ம் ஆண்டு அவர் மீண்டும் அதே வழியைப் பின்பற்றி தமது அதிர்ஷ்டத்தைச் சோதனை செய்தார். அடுத்து அவருக்கு நீல நிற அடையாளக் கார்டு கிடைத்தது. அதாவது அவர் மலேசிய மண்ணில் காலடி எடுத்து வைத்த இரண்டாம் ஆண்டில் அவருக்கு அது கிடைத்தது.

நூர் முகமட், பாப்பார், கினாருட்டில் பிறந்ததாக சத்தியப் பிரமாணம் தெரிவித்தது.

மலேசியக் குடிமகனான எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர்- 1991ம் ஆண்டு தாம் வாக்காளாராகப் பதிவு செய்து கொண்டதாக அவர் ஆர்சிஐ-யிடம் கூறினார்.

தாம் லிக்காஸ் சட்டமன்றத் தொகுதியில் நான்கு முறை வாக்களித்துள்ளதாகவும் நூர் முகமட் சொன்னார்.

2001ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் கள்ளக் குடியேறிகள் இருந்ததால் முன்னாள் சபா முதலமைச்சர் யோங் தெக் லீ, லிக்காஸில் அடைந்த வெற்றி செல்லாது எனத் தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1999ம் ஆண்டு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் அந்தத் தொகுதியில் யோங் வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியில் தோல்வி அடைந்த இரண்டு வேட்பாளர்கள் அந்த முடிவை எதிர்த்து விண்ணப்பம் செய்து கொண்டனர்.

அந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு தமது மேலாளர்கள் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக அப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் கமீல் அவாங் கூறினார்.

“இந்த வழக்கில் காண்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் காணப்படும் குடிமக்கள் அல்லாத வாக்காளர், ஆவி வாக்காளர் எண்ணிக்கை பெரிய பனிப்பாறையின் நுனியாக இருக்க வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.

சட்டத்துக்கு முரணாக லிக்காஸ் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை மறுக்க முடியாது. அரசாங்கத் துறை உட்பட யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல.”