துணைப் பிரதமர்: அரசாங்கத்திடம் போதுமான நிதிகள் உள்ளன. திவாலாகும் நிலையில் இல்லை

muhaiநாடு திவாலாகும் தறுவாயில் இருப்பதாக கூறிக் கொள்ளும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் சாடியிருக்கிறார்.

“எங்களிடம் உண்மையில் நிறைய நிதிகள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த நாட்டுக்கு வருமானமாக வருமான வாரியம் 125 பில்லியன் ரிங்கிட்டை வசூலித்துள்ளது. அது முன்பு எப்போதும் இல்லாத அளவாகும்.”

“ஆகவே நாங்கள் வலுவான நிதி நிலையில் உள்ளோம். நாங்கள் எங்கள் நிதிகளை நல்ல முறையில் செய்து வருகிறோம். அரசாங்க ஊழியர்கள் யாருக்கும் சம்பளம் மறுக்கப்படவில்லை.”

அவர் சரிக்கேயில் 5,000 பேர் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசினார்.

பிஎன் அரசாங்கத்தைக் களங்கப்படுத்துவதற்கு அன்வார் தேர்தல் நெருங்குவதால் பொய்களைப் பரப்பி வருகிறார் என்றும் முஹைடின் கூறினார்.

கூடுதலாக நிதிகள் இருப்பதால். மக்கள் நன்மைக்கு பல வளர்ச்சித் திட்டங்கள் குறிப்பாக சபா, சரவாக்கில் கல்வித் துறைக்குச் செலவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“பிஎன் அரசாங்கம் உண்மையில் மக்களை நோக்கமாகக் கொண்டு இயங்கும் அரசாங்கமாகும். மக்களை மிகவும் பரிவுடன் கவனித்துக் கொள்கிறது. நாங்கள் வறுமையை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். நீண்ட காலமாக அதனைச் செய்வதால் அதில் பெரிய வெற்றியும் அடைந்துள்ளோம்,” என்றார் துணைப் பிரதமர்.

மலேசியர்கள் யாரும் பட்டினியால் மடியவில்லை எனக் கூறிய அவர், அதிகமான உணவு கிடைப்பதால் உடல் பருமன் சாதாரணமாகி விட்டது. நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் அது பெரிய பிரச்னையாக மாறியுள்ளது என்றார்.

தேசிய அளவில் வறுமை விகிதம் மூன்று விழுக்காடாகவும் சரவாக்கில் 4 முதல் 5 விழுக்காடாக மட்டுமே இருப்பதாக அவர் சொன்னார்.