மரணமடைந்த சி. சுகுமாறனின் உடலை இரண்டாவது பரிசோதனைக்கு உட்படுத்த போலீஸ் மறுத்து விட்டதைத் தொடர்ந்து, பிகேஆர் ஒரு ‘சவப் பெட்டி ஆர்ப்பாட்டம்’ நடத்துவதற்கு சூளுரைத்துள்ளது. அந்த ஆர்ப்பாட்டம் பெப்ரவரி 4 ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சின் முன் நடத்தப்படும்.
“நாங்கள் ஒரு சவப் பெட்டியை உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுசெய்னின் அலுவலகத்திற்கு கொண்டு செல்வோம். ஒரு குடிமகன் அரசாங்கத்தால் கொல்லப்பட்டதை அச்சவப் பெட்டி குறிக்கிறது”, என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.
“(சுகுமாறனின்) குடும்பத்தினர் நம்பிக்கை இழந்துள்ளனர். ஆனால், நாங்கள் தொடர்ந்து நீதிக்காகப் போராடுவோம். இன்னொரு உடல் பரிசோதனைக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். அவர்கள் உடலை அடக்கம் செய்யமாட்டார்கள். நாங்கள் போராடுவோம்.”
நாளை இரவு மணி 8.00 க்கு சுகுமாறனின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் முன் மெழுகுவத்தி விழிப்பு போராட்டம் நடத்துவர். அவர்கள் அனைவரும் “சவப் பெட்டி ஆர்ப்பாட்டம்” நிகழ்ச்சியில் சவப் பெட்டியைத் தூக்கிச் செல்வார்கள்.
சுகுமாறனின் மரணத்தை கொலை என வகைப்படுத்த வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் துன் மஜிட் இன்று நிராகரித்து விட்டார்.
மாறாக, மரணத்திற்கான காரணம் நீதிமன்றத்தில் மரண விசாரணையின் மூலம் கண்டறியப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.