தடுப்புக் காவலில் இருக்கும்போது தமிழர்கள் கொல்லப்படுவதும், அவர்கள் மாரடைப்பால் இறக்கிறார்கள் என உரிய விசாரணையின்றி காவல்துறையினர் உண்மையை மூடிமறைப்பதும் தொடர் கதையாகிக் கொண்டுவருகிறது; இது உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
அண்மையில் உலு லங்காட் வட்டாரத்தில் கைவிலங்கு இடப்பட்ட நிலையில் அடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படும் காவலாளியாக பணிபுரிந்த சி. சுகுமாறனின் மரண விசாரணை நீதியான நியாயமான முறையில் நடைபெறவேண்டும் என சிலாங்கூர் நடவடிக்கை குழுத் தலைவர் எல். சேகரன் கேட்டுக்கொண்டார்.
ஒருவர் கைதுசெய்யப்பட்டால் சட்ட விதிமுறைகளை பின்பற்றி அவரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அதுதான் சட்ட நடைமுறை, அதைவிடுத்து விசாரணை என்ற பேரில் கைவிலங்கிட்டு அவரை அடித்துக் கொல்லுவதற்கு காவல்துறையினருக்கு யார் அதிகாரம் வழங்கியது?
சுகுமாறன் கைவிலங்கு இடப்பட்ட நிலையில் மஞ்சள் தூள் முகத்தில் திணிக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. தமிழர்கள் என்றால் அவ்வளவு இழக்காரமா? இதனை நாம் இனிமேலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோமேயானால் நாளை நமக்கும் இதே நிலைதான் என சேகரன் எச்சரித்தார்.
நேரில் பார்த்த சாட்சியங்களும் சம்பவம் குறித்து கிடைக்கப்பெறும் தகவல்களும் அது ஒரு கொலை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், மரணமடைந்த சுகுமாறனின் உடல் மீது இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்படும் என பத்திரப்பூர்வமாக உறுதி அளிப்பது மற்றும் அந்த விவகாரத்தைக் கொலை என்று வகைப்படுத்துவது ஆகிய கோரிக்கைகளை காவல்துறையினர் ஏற்க மறுத்து பின்வாங்குவதிலிருந்து இதில் ஏதோ சூழ்ச்சி அடங்கியுள்ளது. ஆகவே, சுகுமாறன் மரணத்திற்கு நீதி கிடைக்க ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் போராட முன்வர வேண்டும் சேகரன் வேண்டுகோள் விடுத்தார்.
டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது இங்கு துடி துடித்துப்போய் குரல் கொடுத்த அனைத்து உள்ளங்களும் சுகுமாறனின் மரணத்திலும் பங்கெடுக்கவேண்டும்.
அத்துடன், சமூக வலைத்தளங்கள் என அனைத்திலும் இவ்விவகாரம் குறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி சுகுமாறன் மரணத்திற்கு நீதி கிடைக்க, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும் என முன்னாள் கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினருமான எல். சேகரன் மேலும் கேட்டுக்கொண்டார்.