ஜனவரி 12ம் தேதி நடந்த மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ( Himpunan Kebangkitan Rakyat ) 15 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் 14 பேரின் படங்களை போலீஸ் வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூர் போலீசாரின் முக நூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்தத் தகவல் அறிவிக்கப்பட்டது. அந்தச் செய்தியில் சம்பந்தப்பட்டவர்களுடைய படங்களும் காணப்படுகின்றன.
கேல் 112 என அழைக்கப்பட்ட அந்தப் பேரணியின் போது அந்தப் படங்கள் எடுக்கப்பட்டன.
மெர்தேக்கா அரங்கத்திற்கு பிள்ளைகளை கொண்டு செல்வது, 2102 அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின்(PAA) பிரிவு 4(2) -ஐயும் 2001 குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a) ஐயும் மீறுவதாக அது குறிப்பிட்டது.
சம்பந்தட்டவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் பிஏஏ சட்டத்தின் கீழ் தலா 20,000 ரிங்கிட் அபராதமும் குழந்தைகள் சட்டத்தின் கீழ் கூடின பட்சம் 20,000 ரிங்கிட் அபராதம் அல்லது 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அந்தப் படங்களில் காணப்படுகின்றவர்கள் அல்லது அவர்களை பற்றிய தகவல் அறிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் அல்லது புலனாய்வு அதிகாரி ஏஎஸ்பி தோனி லுங்கானுடன் 014 -6225 262 என கைத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.
கால வரம்பு ஏதும் விதிக்கப்படவில்லை என்றாலும் புலனாய்வுக்கு உதவியாக கூடிய விரைவில் அவர்கள் முன் வரவேண்டும் என கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே கேட்டுக் கொண்டதாக தி ஸ்டார் இணைய ஏடு தெரிவித்தது.