ஒரே எண்ணில் பலருக்கு அடையாள அட்டைகள்!

1rciஒரே மாதிரி எண்களில் பலருக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அப்படிப்பட்ட பிரச்னையைக் கொண்ட சுமார் 600 அடையாள அட்டைகள் இருக்கலாம் என்றும் தேசிய பதிவுத் துறை (என்ஆர்டி) தெரிவித்துள்ளது.

“ஆம். சுமார் 600 அடையாள அட்டைகள் இருக்கலாம் என்று எங்கள் ஆவணங்கள் கூறுகின்றன”, என என்ஆர்டி தலைமையக அடையாள அட்டை பிரிவு இயக்குனர் முகம்மட் சொலேஹான் ஒமார் இன்று சாபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்தார்.

ஒரே எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட பலருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது உண்மையா என்று விசாரணை நடத்தும் அதிகாரி மனோஜ் குருப் வினவியதற்கு சொலேஹான் இவ்வாறு பதிலளித்தார்.

ஆனால், அது பற்றி சொலேஹான் மேலும் விவரிக்கவில்லை. அதை விவரிக்குமாறு  விசாரணை அதிகாரிகளும் விசாரணையைக் கண்காணிக்கும் வழக்குரைஞர்களும் கேட்கவில்லை.

சாபாவில் நீலநிற அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களில் பல பிரச்னைகளை என்ஆர்டி அடையாளம் கண்டிருப்பதாக அவர் சொன்னர். ஆனால், அவரால் அவை பற்றித் துல்லியமான புள்ளிவிவரங்களைத் தர இயலவில்லை.

விண்ணப்பப் பாரங்களில் உள்ள தகவல்கள் என்ஆர்டி-இடமுள்ள தகவல்களுடன் ஒத்துப்போவதில்லை என்றாரவர்.

“படங்களும் கைரேகைகளும் என்ஆர்டி ஆவணங்களில் உள்ளதுபோல் இருக்க மாட்டா”, என்றவர் விளக்கினார்.

பிரச்னையைக் களைய வாரியம் அமைக்கப்பட்டது

என்ஆர்டி, குளறுபடிகளைச் சரிசெய்யும் நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் அதற்குப் பொறுப்பானவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“2006-இல்,,தகவல்களைச் சரிபார்க்கவும் சாபாவில் செய்யப்பட்ட நேர்காணல்களை மறுபடியும் நடத்தவும் சிறப்பு வாரியம் ஒன்றை அமைத்தோம்.”.

தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர் அவை பற்றிய புள்ளிவிவரங்கள் கைவசம் இல்லை என்றார்.

ஆனால், குடியேற்றக்காரர்களுக்கு சட்டவிரோதமாக நீலநிற அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதை முகம்மட் சொலேஹான் மறுத்தார்.