நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தில் அம்னோவின் ஆணவம் குறைந்துள்ளதாக முன்னாள் அம்னோ தலைவர்களில் ஒருவரான அப்துல்லா அகமட் கூறுகிறார்.
அதனால் மலாய் வாக்காளர்கள் தேர்வு செய்யக் கூடியதாக இப்போது ஆளும் கட்சி திகழுவதாக அவர் சொன்னார்.
வரும் பொதுத் தேர்தலில் முக்கியமான போர்க்களம் மலாய் வாக்காளர்களே என்று அவர் வருணித்தார்.
அப்துல்லா முன்னாள் கோக் லானாஸ் எம்பி ஆவார். நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேட்டின் தலைமை ஆசிரியராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் விரும்பும் மலாய் வாக்காளர்கள், திறமையற்ற அப்துல்லா அகமட் படாவி தலைமைத்துவம் மீது ஏமாற்றம் அடைந்ததால் 2008 தேர்தலில் அம்னோவுக்கு எதிராக திரும்பினர்என்றார் அவர்.
நஜிப் 2009ல் அப்துல்லாவிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டது முதல் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார். அதனால் அடுத்த தேர்தலில் அம்னோ மலாய் நிலத்தை மீண்டும் பிடிக்கும் என அவர் சொன்னார்.
“நஜிப் தலைமைத்துவம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. அத்துடன் அம்னோவும் சரிவு காண்பதற்கான அரிகுறிகளும் இல்லை.”
“நஜிப் கடைசி அம்னோ பிரதமராக இருக்க மாட்டார்,” என அவர் வலியுறுத்தினார்.
அதற்கு நேர்மாறாக பக்காத்தான் ராக்யாட் வரும் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றத் தவறினால் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அரசியல் வாய்ப்புக்கள் மங்கி விடும் என்பதை அப்துல்லா சுட்டிக் காட்டினார்.
“அன்வார் தோல்வி கண்டால் 14வது பொதுத் தேர்தலின் போது அவருக்கு 70 வயதாகி இருக்கும். அவருடைய அரசியல் வாழ்க்கை அதற்குப் பின்னர் தொடரும் என நான் எண்ணவில்லை.”
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு அணுக்கமான நண்பரான அப்துல்லா, IKAPE எனப்படும் அரசியல் பொருளாதார ஆய்வுக் கழகத்துக்கு தலைமை ஏற்றுள்ளார்.
அஸ்லி எனப்படும் ஆசிய வியூக தலைமைத்துவக் கழகம் ஏற்பாடு செய்துள்ள 15வது மலேசியா வியூகக் கண்ணோட்ட மாநாட்டில் பேசுவதற்கு அழைக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர் ஆவார்.