அண்மைய சிங்கப்பூர் இடைத் தேர்தல் ஒன்றை எடுத்துக்காட்டாகக் கொண்டால் நஜிப் நிர்வாகம் வழங்கி வரும் பல வகையான ரொக்க அன்பளிப்புக்கள், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்து விட முடியாது என அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.
“வாழ்க்கைச் செலவுகள் முதலாவது பிரச்னையாகும். பிஎன் அரசாங்கம் கொடுக்கும் அன்பளிப்புக்கள் பயன் தரமாட்டா,” என மொனாஷ் பல்கலைக்கழகத்தின் சன்வே வளாகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராகவும் அதன் கலை சமூக அறிவியல் துறை தலைவராகவும் பணியாற்றும் ஜேம்ஸ் சின் கூறினார்.
சிங்கப்பூர் புங்கோல் கிழக்கு இடைத் தேர்தலில் அது தான் முக்கியப் பிரச்னையாக இருந்தது. ஆளும் மக்கள் செயல் கட்சியின் கோட்டை எனக் கருதப்பட்ட அந்தத் தொகுதியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் எதிர்த்தரப்பு தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. வாக்காளர்கள் திசை மாறியதே அதற்குக் காரணமாகும் என சின் சொன்னார்.
‘அடுத்த பொதுத் தேர்தலில் எதனை எதிர்பார்க்கலாம் ?’ என்னும் தலைப்பைக் கொண்ட ஆய்வரங்கில் சின் பேசினார். அஸ்லி எனப்படும் ஆசிய வியூக தலைமைத்துவக் கழகம் ஏற்பாடு செய்திருந்த 15வது மலேசிய வியூகக் கண்ணோட்ட மாநாட்டில் ஒரு பகுதியாக அந்த ஆய்வரங்கம் நடைபெற்றது.