பொர்ன்திப்-பைக் கொண்டு வருவதற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்தது

porntipஜனவரி 23ம் தேதி போலீஸ்காரர்களினாலும் கும்பல் ஒன்றினாலும் அடிக்கப்பட்டு மரணமடைந்ததாக கூறப்படும் சி சுகுமார் மீது இரண்டாவது சவப் பரிசோதனையை நடத்துவதற்கு பிரபலமான தாய்லாந்து உடற்கூறு நிபுணரான டாக்டர் பொர்ன்திப் ரோஜாசுனானந்-தை அனுமதிப்பதற்குத் தேவையான ஆவணங்களை வெளியிடுவதற்குச் சுகாதார அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது.

புத்ராஜெயாவில் நிகழ்ந்த ஒரு சந்திப்பின் போது அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் டாக்டர் முகமட் அஸ்ஹார் யாஹாயாவும் மருத்துவ மேம்பாட்டு பிரிவு இயக்குநர் டாக்டர் அஸ்மி ஷாபியும் அந்த வாக்குறுதியை வழங்கியதாக சுகுமார் குடும்ப வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

செர்டாங் மருத்துவமனையில் சவப்பரிசோதனையை பொர்ன்திப் மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை அமைச்சு வழங்கவும் அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டதாக வழக்குரைஞர் லத்தீப்பா கோயா கூறினார்.

குடும்பத்தினரும் லத்தீப்பாவும் சக வழக்குரைஞர் என் சுரேந்திரனும் இந்தச் செய்தி எழுதப்படும் நேரத்தில் அதிகாரத்துவ ஆவணங்களைப் பெறுவதற்காக அமைச்சு கட்டிடத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

“ஆவணங்களை தயாரித்த பின்னர் எங்களுக்கு தொலைநகல் மூலம் அனுப்புவதாக அவர்கள் தெரிவித்தனர். ஆவணங்கள் தயாராகும் வரையில் காத்திருப்பதாக நாங்கள் அவர்களிடம் தெரிவித்தோம்,” என லத்தீப்பா சொன்னார்.

“முன்னர் ஒப்புக் கொண்டதற்கு ஏற்ப அந்த ஆவணங்களில் உள்ளடக்கம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். ஆகவே நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.”

40 வயதான சி சுகுமார் உலு லங்காட்டில் தாமான் ஸ்ரீ நாண்டிங்-கில் கும்பல் ஒன்றினாலும் மூன்று போலீஸ்காரர்களினாலும் விரட்டப்பட்ட பின்னர் கைவிலங்கு மாட்டப்பட்டிருந்த போது அடிக்கப்பட்டு மரணமடைந்ததாகக்  கூறப்படுகின்றது.

மாரடைப்பால் சுகுமார் மரணமடைந்திருக்கக் கூடும் எனக் கூறும் சவப்பரிசோதனை அறிக்கையில் மனநிறைவு கொள்ளாத சுகுமார் குடும்பத்தினர் இரண்டாவது சவப்பரிசோதனையை நடத்துவதற்கு கூட்டரசு அரசாங்கம் பொர்ன்திப்பை அழைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

பொர்ன்திப் தாய்லாந்து அரசாங்க அதிகாரி என்பதால் அவரை இங்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இரண்டாவது சவப்பரிசோதனையை நடத்துவதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

தியோ பெங் ஹாக் மீதான இரண்டாவது சவப் பரிசோதனையை பார்வையிடுவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் பொர்ன்திப்பை 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமித்தது.

தியோ மரணமடைந்ததற்கான காரணத்தை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட மரண விசாரணையில் அவர் பின்னர் சாட்சியமளித்தார்.