போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார் என்று கூறப்படும் சி.சுகுமார் மீது இரண்டாவது சவப் பரிசோதனை நடைபெறுவதைச் சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய் தடுக்க முயல்கிறார் என பிகேஆர் சாடியுள்ளது.
போலீசிடமிருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவு இல்லையென்பதால் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையம் இரண்டாவது சவப் பரிசோதனை நடத்த மறுப்பதாக பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“லியோ, அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் போலீசிடமிருந்து அங்கீகாரம் வர வேண்டும் என்று வலியுறுத்துவதன்வழி இரண்டாவது சவப் பரிசோதனை நடப்பதற்குத் தடங்கலாக இருக்கிறார்.
“இது அதிர்ச்சி அளிக்கிறது, ஏமாற்றமளிக்கிறது என்பதுடன் இரண்டாவது பிரேத பரிசோதனை நடப்பதைத் தடுக்கும் அப்பட்டமான சதித் திட்டமாகவும் தெரிகிறது”, என்று சுரேந்திரன் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
சுகாதார அமைச்சைப் பொறுத்தவரை சவப் பரிசோதனைக்கான வசதிகளைத்தான் செய்து கொடுக்க முடியுமே தவிர பரிசோனையைச் செய்யும்படி கூறும் அதிகாரம் அதற்கில்லை என்று லியோ கூறியதாக ஆங்கில நாளேடான த ஸ்டார் அறிவித்திருந்தது.
லோவின் கூற்றை மறுத்த சுரேந்திரன் (வலம்), சவப் பரிசோதனை செய்ய அரசாங்க மருத்துவமனைகளைப் பணிக்கும் அதிகாரம் சுகாதார அமைச்சுக்கு உண்டு என்றார்.
“இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய போலீஸ் அனுமதி வேண்டும் என்று சட்டம் எதுவும் கிடையாது. எதற்காக அம்மருத்துவமனை (யுஎம்எம்சி) அது வேண்டும் என்று அடம் பிடிக்கிறது”, என்றவர் வினவினார்.
சவப் பரிசோதனை நடத்த தாய்லாந்தின் பிரபல உடற்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜாசுனானந்தை அனுமதிப்பதற்குத் சுகாதார அமைச்சு நேற்று ஒப்புக் கொண்டது என்றாலும் அதிலும் தமக்கு ஐயப்பாடு இருப்பதாக சுரேந்திரன் கூறினார்.
எனவே, பிரதமரும் சுகாதார அமைச்சும் பொர்ந்திப் சவப் பரிசோதனை செய்வதில் தடங்கல் எதுவும் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.