‘எந்தக் கட்சி என் புதல்வியைப் பதிவு செய்தது ?’ என ராமசாமி வினவுகிறார்

sprபினாங்கு இரண்டாவது முதலமைச்சர் பி ராமசாமி, தமது புதல்வியை ‘ஒர் அரசியல் கட்சி’ செமினியில் ஒரு வாக்காளராகப் பதிவு செய்தது என தேர்தல் ஆணையம் (இசி) விடுத்துள்ள அறிக்கையில் மனநிறைவு கொள்ளவில்லை.

கூச்சிங்கில் அண்மையில் இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் வெளியிட்ட அந்த அறிக்கை தம்மை ‘குழப்பி’ விட்டதாக ராமசாமி சொன்னார்.

“அவரது அறிக்கை முற்றிலும் பொறுப்பற்றது, பரிதாபகரமானது. அந்தக் காரியத்தை செய்ததாக தாம் கூறும் அரசியல் கட்சியின் பெயரை அவர் வெளியிடத் தவறி விட்டார்.”

“என் புதல்வியைப் பதிவு செய்த அரசியல் கட்சி எது என்பதை அவர் என்னிடம் சொல்ல வேண்டும். அவர் தகவலை மறைக்கக் கூடாது,” என ராமசாமி தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

தமது புதல்வி அவருக்குத் தெரியாமல் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் ‘பெரிய ஊழலை’ திறந்துள்ளதாக கூறிய அவர், அதனை முழுமையாக ஆய்வு செய்தால் அது போன்ற ‘பல மோசடிகளை’ இசி கண்டு பிடிக்கலாம் எனச் சொன்னார்.spr1

கடந்த வாரம் அவர் அந்த விஷயம் குறித்து போலீசில் புகார் செய்துள்ளார். அதிகாரிகள் தங்கள் புலனாய்வை முடிப்பதற்கு இரண்டு வார அவகாசத்தை வழங்குவதாகவும் ராமசாமி தெரிவித்தார்.

“நான் அந்த விவகாரத்தைக் கடுமையாகக் கருதுகிறேன். அவசியமானால் இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் வரை அதனைக் கொண்டு செல்வேன்,” என அந்த டிஏபி துணைச் செயலாளர் எச்சரித்தார்.

செமினியில் தமது புதல்வி அவருடைய ஒப்புதல் இல்லாமலும் அவருக்குத் தெரியாமாலும் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராமசாமி புகார் செய்ததற்கு அப்துல் அஜிஸ் பதில் அளித்தார்.

2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி செமினி சட்டமன்றத் தொகுதியிலும் உலு லங்காட் நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்காளராக ராமசாமியின் புதல்வி பதிவு செய்யப்பட்டுள்ளதாக இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

சிலாங்கூரில் உள்ள அவரது முகவரியைக் கொண்ட அடையாளக் கார்டுடன் இசி-யின் ‘ஏ’ பாரத்தின் மூலம் அந்தப் பதிவு நிகழ்ந்துள்ளது. அந்த பாரத்தை அரசியல் கட்சி ஒன்று சமர்பித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

“அவர் சார்பில் அதனை யார் செய்தார் ?”

அந்தப் பதிவை டிஏபி மேற்கொண்டதாக கூறப்படுவதை ராமசாமி மறுத்தார். அந்த நேரத்தில் தமது புதல்வி ஸ்ரீ வைதேகி முனைவர் பட்டப்படிப்புக்காக பிரிட்டனில் இருந்தார் என்றார் அவர்.

பாரங்களைப் பூர்த்தி செய்வது, அடையாளக் கார்டின் போட்டோ பிரதியை வழங்குவது, கையெழுத்திடுவது ஆகியவை ஒருவரை வாக்காளராக பதிவு செய்வதற்கு தேவைப்படும் அம்சங்கள் என அவர் தெரிவித்தார்.

spr2“என் புதல்வி அதனைச் செய்யவில்லை, யார் அவர் சார்பில் அதனைச் செய்தார். அவரை வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதற்கு யாரோ ஒருவர் அவர் சார்பில் அந்த வேலையைச் செய்துள்ளார்,” என ராமசாமி குற்றம் சாட்டினார்.

அதனைச் செய்ததாகக் கூறப்படும் அரசியல் கட்சியின் பெயரை அப்துல் அஜிஸ் அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர் ” இது குறித்து இது வெளிப்படையாக இல்லாவிட்டால் பொதுத் தேர்தலின் போது அது எப்படித் தூய்மையானதாகவும் நியாயமானதாகவும் நடந்து கொள்ளப் போகிறது ?” என வினவினார்.