‘கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதாகச் சொல்லப்படுவதை டிஏபி-யின் அரிபின் மறுக்கிறார்

ariffinபல்கலைக்கழகம் ஒன்றில் தேவாலயம் ஒன்றை அமைக்கும் நோக்கத்துடன் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை டிஏபி தேசிய உதவித் தலைவர் அரிபின் ஒமார் மறுத்துள்ளார்.

அந்த ‘மிகவும் கடுமையான அவதூறு’  UPNM எனப்படும் Universiti Pertahanan Nasional Malaysia பல்கலைக்கழகத்திலிருந்து வந்ததாக அரிபின் பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.

தமது பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அவர் அந்த நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் அந்தப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உயர் நிலை அதிகாரி ஒருவரைச் சந்தித்த போது அவ்வாறு கூறிக் கொண்டதாக மகஜர் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரிபின் தெரிவித்தார்.

“அந்த UPNM பல்கலைக்கழகத்துக்குள் சிஐஏ ஊடுருவியுள்ளதாகவும் சில பல்கலைக்கழக ஊழியர்களின் ஆராய்ச்சிகளுக்கு சிஐஏ நிதி உதவி செய்வதாகவும் அந்த மகஜரில் கூறப்பட்டுள்ளது,” என்றும் அவர் சொன்னார்.

தாம் ஒரு முஸ்லிம் என்றும் தமது சமயத்தை விட்டு விலகவில்லை என்றும் வலியுறுத்திய அரிபின், UPNM உட்பட எந்த ஒர் இடத்திலும் தாம் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதில் சம்பந்தப்படவில்லை என்றும் அழுத்தமாகக் கூறினார்.

“எனக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள அந்தக் குற்றச்சாட்டுக்கள் வெறுமையானவை, என்னையும் அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள மற்ற ஊழியர்களையும் களங்கப்படுத்துவதே அவற்றின் நோக்கமாகும்,” என்றார்

அவர்.