அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் 450 ஏழைக் குடும்பங்களுக்கு அங் பாவ் கொடுக்கப்பட்ட விதம் குறைகூறப்பட்டுள்ளது. முந்திய ஆண்டில் கொடுக்கப்பட்ட தொகையில் பாதிதான் இவ்வாண்டில் அங் பாவாகக் கொடுக்கப்பட்டிருப்பதுதான் குறைகூறலுக்குக் காரணமாகும்.
செராஸ் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் டான் கொக் வாய் (படத்தில் வலப்பக்கம் கடைசியாக இருப்பவர்), தம் தொகுதியில் அடுக்குமாடி வீடுகளில் வாடகைக்குக் குடியிருக்கும் 21 குடும்பங்கள் பிப்ரவரி 5-இல் சீனப்புத்தாண்டு அங் பாவாக ரிம150 மட்டுமே கொடுக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகக் கூறினார்.
பத்தாண்டுக் காலமாக கோலாலும்பூர் மாநராட்சி மன்றம் (டிபிகேஎல்), ஏழைக் குடும்பங்களுக்கு விழாக்காலங்களில் ரிம300 அன்பளிப்பு வழங்குவதுதான் வழக்கம் என்பதை அவர் சுட்டிகாட்டினார்.
இவ்வாண்டில், பார்க்கப்போனால் பணவீக்கத்தையெல்லாம் கருத்தில்கொண்டு, ஏழைக் குடும்பங்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட அங் பாவை ரிம500 ஆக கூட்டிக் கொடுத்திருக்க வேண்டும் என்று டான் குறிப்பிட்டார்.
டிபிகேஎல்-இன் பட்ஜெட்டான ரிம2.18 பில்லியன்தான் நாட்டின் மூன்றாவது பெரிய பட்ஜெட்டாகும் என்று கூறிய அவர், அதில் அமலாக்கப் பிரிவுகளுக்கும் குதிரைப்படைப் பிரிவுக்கும் வரம்புமீறி செலவிடப்படுகிறது என்றார்.
“ஆனால், 450 ஏழைக்குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்துக்கு ரிம300 அங் பாவ் என்ற வகையில், மொத்தம் ரிம135,000 செலவிட அதற்கு மனமில்லை”.
தலைநகரில் அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் 80,000 குடும்பங்களில் 450 ஏழைக் குடும்பங்கள் மட்டுமே அங் பாவுக்கு விண்ணப்பம் செய்ததாக அவர் தெரிவித்தார்.
இருப்பது பகிர்ந்து கொடுக்கப்பட்டது
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முயன்றதாகவும் ஆனால், பலனில்லை என்றும் அவர் சொன்னார்.
மலேசியாகினி, டிபிகேஎல் துணைத் தலைமை இயக்குனர் முகம்மட் அமின் நோர்டின் அப்துல் அசீசைத் தொடர்புகொண்டு பேசியபோது, விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை கூடிவிட்டதாகவும் அதனால், இருக்கும் ஒதுக்கீட்டைத்தான் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்குமுன் டிபிகேஎல், ஹரி ராயா, தீபாவளி அன்பளிப்புகளாக ரிம150 தான் கொடுத்தது. யாரும் குறைப்பட்டுக் கொள்ளவில்லை என்றாரவர்.
எனவே, அன்பளிப்பு பெற்றவர்கள் கிடைத்ததை மனநிறைவுடன் பெற்றுக்கொண்டு நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டுமே தவிர குறை சொல்லக்கூடாது என்றார்.