வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் அதிகரிப்பதாக ஆயர் எச்சரிக்கிறார்

Bishop“அரசியல் களத்தில் இரு புறமும் வேகம் கூடியுள்ள இந்தத் தேர்தலுக்கு முந்திய கால கட்டத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் அதிகரித்துள்ளதை” காண்பதாக கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் எச்சரித்துள்ளார்.

“தேர்தல் காலத்தில் பொறுப்பற்ற பேச்சுக்களை நாம் ஒரளவுக்கு எதிர்பார்க்க வேண்டும் என்றாலும் நாகரீகமான வாக்குவாத எல்லைகள் மீறப்படுவதற்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என ஜோகூர் மலாக்கா கத்தோலிக்க தேவாலயத் திருச்சபையின் தலைவருமான அவர் சொன்னார்.

“சமயத்தையும் இனத்தையும் சாடுகின்றவர்களுக்கும் வதந்திகளைப் பரப்புகின்றவர்களுக்கும் மக்கள் எளிதில் மயங்கவில்லை என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டிய போதிலும் நஞ்சைக் கலப்பதற்கு வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நபர்கள் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”Bishop1

பத்து மலையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்து அல்லாத பொது மக்களுக்கு தொந்தரவாக இருப்பதாகவும் அது மலேசியாவில் பெரும்பான்மை சமய சமூகத்தின் உணர்வுளை மீறுவதாகவும் சினார் ஹரியான் நாளேட்டில் ரித்துவான் தீ அப்துல்லா என்பவர் எழுதியுள்ள கட்டுரையை அந்த ஆயர் சுட்டிக்காட்டினார்.

“தீங்கற்ற சாந்தமான ஒரு சமூகத்திற்கு எதிராக மக்களைத் தூண்டி விடும் நோக்கத்துடன் தொடுக்கப்படும் நஞ்சு கலந்த வாதங்கள் அவை,” என்றார் அவர்.

“மலாய் மொழி பைபிள்கள் குறிப்பிட்ட சமூகத்துக்கு மருட்டலாக இருப்பதாக கூறிக் கொண்டு அவற்றை எரிக்குமாறு அண்மையில் விடுக்கப்பட்ட அறைகூவலைப் போன்றது தான் அது,” என அந்த ஆயர் கருதுகிறார்

தூண்டிவிடும் நபர்கள் குறித்து எச்சரிக்கை தேவை

“ஒரு பக்கம் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் நிகழ்கின்றன. இன்னொரு பக்கம் தூண்டி விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என ஆயர் பால் தான் சொன்னார்.

“வழிபாட்டுத் தலங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவங்கள், பள்ளிவாசல்களை களங்கப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை மக்களைத் தூண்டவில்லை என்பது மகிழ்ச்சி அளித்தாலும் தங்களது தீய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயலுகின்றவர்கள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.”

தேர்தலுக்கு முந்திய இந்தக் கால கட்டத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கலாம். ஆனால் அது வெறுப்புணர்வைத் தூண்டி விடும் பேச்சுக்களாக இருக்கக் கூடாது,” என ஆயர் வலியுறுத்தினார்.