சபாவில் கடந்த வாரம் மேலும் இரண்டு பிஎன் பிரமுகர்கள் பிகேஆர் கட்சியில் இணைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பிஎன் பிரமுகர்கள் பலர் கட்சி மாறி வருகின்றனர்.
முன்னாள் சபா துணை அமைச்சர் யாப்பின் ஜிம்போட்டோன், முன்னாள் கூட்டரசுத் துணை அமைச்சர் அகமட் ஷா தம்பாக்காவ் ஆகியோர் புதிதாக பிகேஆர் கட்சியில் சேர்ந்துள்ளவர்கள் ஆவர். அவர்கள் இப்போது செயல்படாத பெர்ஜெயா கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களிம் முதல் நாளான பிப்ரவரி 10ம் தேதி பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சபாவுக்குச் சென்றிருந்த போது அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக பிகேஆர் -க்கு மாறினர்.
அவர்கள் இருவரும் பிகேஆர்-ல் இணைந்துள்ளது சபா பக்காத்தான் ராக்யாட்டுக்கு உந்துதலைக் கொடுத்துள்ளதாக அதன் செயலாளர் ரோலண்ட் சியா ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“பக்காத்தான் வழியாக சிறந்த மலேசியாவையும் சபாவையும் காண விரும்பும் யாரையும் நாங்கள் வரவேற்கிறோம்,” என்றார் அவர்.
முன்னாள் பெர்ஜெயா அரசியல்வாதியும் முன்னாள் சபா முதலமைச்சருமான சொங் கா கியாட்-டனும் பிகேஆர் கட்சி தொடர்பு கொண்டிருக்கும் தகவலையும் சியா வெளியிட்டார்.
சொங், பிகேஆர்-ருக்கு ‘ஆதரவாக’ இருப்பதாக கூறும் ‘வதந்திகளை’ சபா பிகேஆர் வரவேற்பதாகவும் அவர் சொன்னார். ஆனால் அவர் அந்த வதந்திகளை உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
சொங் அந்த மாநிலத்தில் இயங்கும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் ஆலோசகர் ஆவார். அவர் 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநில துணை முதலமைச்சர் பதவியைத் துறந்தார். காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் ‘கொள்கை அடிப்படையில்’ விலகுவதாக அவர் சொன்னார்.
பிஎன் னைச் சேர்ந்த பியூபோர்ட் எம்பி லாஜிம் உக்கின், துவாரான் எம்பி வில்பிரட் பூம்புரிங் ஆகியோர் அந்தக் கட்சியிலிருந்து விலகிய பின்னர் பல குறிப்பிடத்தக்க சபா அரசியல்வாதிகள் அவர்களைப் பின்பற்றியுள்ளனர்.