வான் அஜிஸா, ஜுய் மெங்கை ஆதரிக்கிறார், பூ-வைக் கண்டித்தார்

chua-booபிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் அந்தக் கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவர் சுவா ஜுய் மெங்-கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் பிகேஆர், டிஏபி கட்சிகளுக்கு இடையிலான இட ஒதுக்கீடு தகராற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்-வை கண்டித்துள்ளார்.

வான் அஜிஸா வெளியிட்டுள்ள நான்கு பத்தி அறிக்கையில் பூ-வின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் சுவாவுக்கு எதிராக திங்கட்கிழமை பூ வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதையே அவர் குறிப்பிடுகிறார் என்பது நிச்சயமாகும்.

“பக்காத்தான் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன- அவை இட ஒதுக்கீடுகள் தொடர்பாக  அல்லது வேறு எந்த விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாக- அதுவும் தேர்தல் நெருங்கி வரும் இந்த வேளையில் பேசக் கூடாது.”

“டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆலோசனை கூறியுள்ளது போல பக்காத்தானுக்குள் நிலவும் வேறுபாடுகள் உள் வழிகளில் தீர்க்கப்பட வேண்டும்,” என வான் அஜிஸா சொன்னார். chua1

தமது சொந்த நலனுக்காக சுவா ஜோகூரில் பிகேஆர்-டிஏபி உறவுகளை சீர்குலைத்து வருவதாக ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினருமான பூ அறிக்கை வெளியிட்ட பின்னர் அவர் இனிமேல் அறிக்கைகள் வெளியிடக் கூடாது என லிம் கடந்த செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டார்.

ஜோகூர் அரசியல் வடிவமைப்பில் மூன்று பக்காத்தான் கட்சிகளும் பெரிய அளவில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், பல முக்கியமான பிரச்னைகளில் பொதுவான புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“பாதகமான ஊடக அறிக்கைகள் யாருக்கும் உதவப் போவதில்லை. மாறாக நமது எதிரிகளே அதனைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும்.”

ஜோகூர் பிகேஆர்-ரை வழி நடத்துவதற்கு சுவா-வுக்கு உள்ள ஆற்றல் மீது பிகேஆர் தலைமைத்துவம் தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளதாகவும் வான் அஜிஸா வலியுறுத்தினார்.

“சுவா அந்த மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பங்காற்றியுள்ளார். மக்களுக்காக அந்த மாநிலத்தை தொடர்ந்து மாற்றுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.”