விற்பனை நோக்கத்திற்காக ஈழம் குறித்த உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தாதீர்

thinakuralமலேசியாவில் முக்கிய நாளிதழ்களாக கருதப்படும் இரு தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த முன்பக்க செய்தி இன்று மலேசிய தமிழர்கள் பலரைக் கலவரப்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காலையில் நாளிதழைப் பார்த்த உடனே ஏதோ ஒரு பாரமும் விவரிக்க முடியாதொரு துக்கமும் மனமெங்கும் விரவி விட்டதைத் தடுக்க முடியவில்லை.

நேற்றைய தமிழ் நாளிதழ்களில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் படுகொலை குறித்த படங்களும் செய்தியும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டிருந்தது. அதற்கான தேவை நேற்றிருந்தது. அது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை உலகின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற அவசியம் அந்த செய்திக்கும் அந்த படங்களுக்கும் இருந்தது. சனல் 4 அந்த படங்களை உறுதிப்படுத்தியிருந்தது. அந்த படங்கள் குறித்த தகவலையும் வெளியிட்டிருந்தது.

ஆனால், இன்றைய முன்பக்க செய்தியில் “மகனைப் போன்றே பிரபாகரனும் இராணுவ முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்,” என்ற செய்தியோடு மிக கொடுரமான 2 படங்களும் வெளியிடப்பட்டிருந்தன. செய்தியின் உள்ளடக்கத்தையும் தலைப்பையும் பார்க்கின்ற பொழுது முற்றும் முழுதாக வணிக நோக்கத்திற்காக அவை வலிந்து திணிக்கப்பட்டவையாக என் கண்களுக்குத் தெரிகின்றது.தேசிய தலைவரின் இருப்பு குறித்தோ இறப்பு குறித்தோ எந்தவொரு தகவலையும் சனல் 4 வெளியிடவில்லை. அப்படி இருக்கையில்,  ஏன் தலைவரின் நிலை குறித்த செய்தியை இவ்விரு நாளிதழ்களும் இன்று தூக்கிப் பிடிக்க வேண்டும்?

தமிழர்களின் ஆன்ம பலத்தைச் சிதைத்து உணர்வு ரீதியில் அவர்களைச் சோர்வடையச் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதையேன் மலேசிய தமிழர்களாகிய நாமும் நமது ஊடகங்களும் முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கேள்வி.

tamilnesanவிடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கிய பின்னர் தலைவர் பிரபாகரன் கூறிய ஒரு பதில் ஒட்டுமொத்த உலகத்தையும் திருப்பி பார்க்க வைத்தது. “என்று நான் தமிழீழத்திற்கான எனது நிலைப்பாட்டிலிருந்து விலகுகிறேனோ அன்றே எனது மெய்க்காவலர்கள் என்னைச் சுட்டுக் கொல்லலாம்” என பகிரங்கமாக அறிவித்தவர் தலைவர் பிரபாகரன். 2002-ஆம் நடந்த அனைத்துலக ஊடகவியலாளர் சந்திப்பின்போதும் அதனை அவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

எல்லா போராளிகளும் கழுத்தில் ஒரு குப்பி தனது கழுத்தில் இரு குப்பியோடு வாழ்ந்தவர் பிரபாகரன். எதிரியிடம் சரணடைதல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எப்படியான விளைவுகளைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தே வாழ்ந்தவர் அவர்.

ஈழத்தின் தலைமை இருக்கிறதா இல்லையா என்பது குறித்து விவாதம் செய்வது என்னுடைய நோக்கமல்ல. செய்தியின் உண்மைத் தன்மை அறியாமல் ஒட்டுமொத்த தமிழினத்தின், நிகழ்கால வீரத்தின் அடையாளமாக மதிக்கப்படும் தமிழீழ தேசிய தலைவரை இனியும் கொச்சைப் படுத்துகிற பதிவுகளை ஒருபோதும் செய்ய வேண்டாம் என மலேசிய தமிழர்கள் சார்பில் நினைவுறுத்த விரும்புகின்றேன்.

இன்றைய நிலையில் உலகத் தமிழினத்தின் அங்கத்தினரான நமது வரலாற்றுக் கடமை ஒன்றுதான். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை: அதை வெளிக் கொணர ஒவ்வொரு நாளும் அதுகுறித்து பரப்புரை செய்யுங்கள். மக்களுக்கு இனப் படுகொலை குறித்த தெளிவினைக் கொண்டு வாருங்கள். மலேசிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள். மாபெரும் நிலையிலான மக்கள் ஆதரவைத் திரட்டுங்கள். இதுதான் காலத்தின் தேவை. கட்டாயமும் கூட.

அதை விடுத்து நாளிதழ் விற்பனையைக் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக படங்களையும் செய்திகளையும் வெளியிட்டு மக்களைக் குழப்பி உணர்வுகளை மழுங்கடிக்காதீர்கள்.

——————————————————————————————————————————–

தமிழினி –  பல ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து ஆய்வுகளை எழுதி வரும் மலேசிய எழுத்தாளர்.

TAGS: