ரவாங் கோயில் ஒன்றில் கடந்த மூன்று வாரங்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி இன்று மாலை மயங்கி விழுந்தததைத் தொடர்ந்து கோலாலம்பூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.
“வேதமூர்த்தி இன்று மாலை 4 மணி அளவில் குளியலறைக்குச் செல்ல முயன்ற போது மயங்கி விழுந்தார்,” என ஹிண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர் டபிள்யூ ஜம்புலிங்கம் கூறினார்.
கண்காணிக்கப்படுவதற்காக ஜாலான் ஈப்போவில் உள்ள டமாய் மருத்துவமனையில் வேதமூர்த்தி
சேர்க்கப்பட்டுள்ளதாக ஜம்புலிங்கம் மேலும் தெரிவித்தார்.
“அவருடைய சர்க்கரை அளவு மிகவும் குறைந்து விட்டதாலும் இரத்த அழுத்தம் மிகவும் உயர்வாக
இருப்பதாலும் அவர் இப்போது மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.”
ஏழை இந்தியர்களை மேம்படுத்தும் நோக்கம் கொண்ட ஹிண்ட்ராப் பெருந்திட்டத்துக்கு ஆதரவு தேடும்
பொருட்டு கடந்த 22 நாட்களாக வேதமூர்த்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேதமூர்த்தியின் உடல் நிலை குறித்து நேற்று ஹிண்ட்ராப் தலைவர்கள் கவலை தெரிவித்தனர். ஆனால் அவர் தமது உண்ணாவிரதத்தைத் தொடருவதில் பிடிவாதமாக இருந்தார்.

























