குகன் குடும்பம் அரசாங்கத்திற்கு எதிரான சிவில் வழக்கில் வெற்றி பெற்றது

kuganபோலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த ஏ குகன் குடும்பத்தினர்,  அரசாங்கத்திற்கும் போலீசாருக்கும் எதிராகத் தொடுத்த சிவில் வழக்கில் வெற்றி  பெற்றுள்ளனர்.

அந்தக் குடும்பத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 751,700 ரிங்கிட்டும் செலவுத்  தொகையாக 50,000 ரிங்கிட்டும் பிரதிவாதிகள் கொடுக்க வேண்டும் என  கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.

குகனுடைய தாயாரான 43 வயது இந்திரா நல்லதம்பி, தமது புதல்வர் ‘கொடூரமாக  கொலை’ செய்யப்பட்டதாக கூறிக் கொண்டு அரசாங்கத்தின் மீதும் போலீசார்  மீதும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 100 மில்லியன் ரிங்கிட் சிவில் வழக்கு  ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அப்போதைய சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் (இப்போது தேசிய போலீஸ் படைத் தலைவர்), போலீஸ் அதிகாரி நவீந்தரன்  விவேகானந்தன், அப்போதைய சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் ஜைனல் ரஷிட்  அபு பாக்கார் (காலமாகி விட்டார்), அப்போதைய தேசிய போலீஸ் படைத்  தலைவர், அரசாங்கம் ஆகிய தரப்புக்களைப் பிரதிவாதிகளாக அவர் பெயர்  குறிப்பிட்டிருந்தார்.