அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்படுவதற்கு முன்னரே குற்றச் செயல் விகிதம் கூடியுள்ளதை அதிகாரத்துவ குறியீடுகள் காட்டும் வேளையில் குற்றங்கள் பெருகுவதற்கு அந்தச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டது தான் காரணம் என எப்படிச் சொல்ல முடியும் என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா வினவியுள்ளார்.
2011ம் ஆண்டு இறுதியில் அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டது தான் குற்றச் செயல்கள் குறிப்பாக நகரங்களில் கூடியதற்கு ஒரே காரணம் அரசாங்கமும் போலீசும் சொல்கின்றன என்று அவர் சொன்னார்.
அந்தச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டதால் ‘சந்தேகத்துக்குரிய நபர்களை’ தடுத்து வைக்கும் அதிகாரம் போலீசுக்கு இல்லாமல் போய் விட்டது.
நாம் குற்ற புள்ளி விவரங்களை ஆய்வு செய்தால் அவசர காலச் சட்டம் நடப்பில் இருந்த போது குற்றச் செயல்கள் கூடியதை அறிய முடியும் எனப் புவா விடுத்த அறிக்கை தெரிவித்தது.
2003 முதல் 2008 வரையில் மலேசியக் குற்றச் செயல் குறியீடு வேகமாக கூடியது. 2004க்கும் 2007க்கும் இடையில் குற்ற விகிதம் 34 விழுக்காடு கூடியுள்ளது. அந்த நேரத்தில் போலீசிடம் அவசர காலச் சட்ட அதிகாரம் இருந்தது. ஆனால் குற்றச் செயல்களைத் தடுக்க முடியவில்லை என அவர் சொன்னார்.