கட்டாயமாக மரண தண்டனை விதிக்கும் சட்டங்களை மறு ஆய்வு செய்வதற்காக அவற்றுக்கு தற்காலிகத் தடைகளை விதிக்குமாறு அரசாங்கத்தை டிஏபி அரசியல் கல்வி இயக்குநரும் குளுவாங் எம்பி-யுமான லியூ சின் தொங் கேட்டுக் கொண்டுள்ளார்.
கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டங்கள் “பழங்காலத்திய தண்டனை முறையாகும்” என அவர் வருணித்தார்.
“அந்தப் பழங்காலத்திய தண்டனை முறை அனைத்துலக வழக்கங்களுக்கு முரணாக இருப்பதால் மலேசியா மரண தண்டனையை மறு ஆய்வு செய்வதற்கான நேரம் வந்து விட்டது,” என லியூ இன்று விடுத்த ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“அரசாங்கம் குறைந்தபட்சம் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டங்களை மறு ஆய்வு செய்து நீதிபதிகளுடைய உசிதத்திற்கு விட்டு விட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.”
உள்துறை அமைச்சு தமக்கு வழங்கிய தகவல்களின் படி பல்வேறு குற்றங்களுக்காக 964 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் லியூ குறிப்பிட்டார்.