சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள KLIA2 என அழைக்கப்படும் குறைந்த கட்டண விமான முனையத்தை கட்டி முடிப்பதற்கு நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ள போதிலும் கூடுதல் செலவுகள் ஏதும் இருக்காது எனப் போக்குவரத்து அமைச்சு உறுதி அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று பிகேஆர் பிஜே செலத்தான் எம்பி ஹீ லொய் சியான் சமர்பித்த கேள்விக்கு வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அந்த 4 பில்லியன் ரிங்கிட் திட்டம் எப்போது நிறைவு பெறும் என்றும் எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் தாமதத்தால் எவ்வளவு கூடுதல் செலவு ஏற்படும் என்றும் ஹீ அறிய விரும்பினார்.
KLIA2 கட்டுமானச் செலவு 4 பில்லியன் ரிங்கிட் என்றும் 3 பில்லியன் ரிங்கிட் குத்தகையாளருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தாமதம் காரணமாக கூடுதல் செலவுகள் ஏதும் இருக்காது,” என்றும் அமைச்சு உறுதி அளித்தது.