கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் குதப்புணர்ச்சி வழக்கு இரண்டில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசாங்கம் செய்து கொண்ட முறையீடு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.
புத்ராஜெயாவில் உள்ள முறையீட்டு நீதிமன்றத்தில் அரசாங்க முறையீடு விசாரிக்கப்படும்.
2008ம் ஆண்டு ஜுன் 26ம் தேதி பிற்பகல் மணி 3.10க்கும் 4.30க்கும் இடையில் தேசா டமன்சாரா ஆடம்பர அடுக்குமாடித் தொகுதியில் தமது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அன்வாரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விடுவித்தது.
மாதிரிகள் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையை புலனாய்வு அதிகாரியான டிஎஸ்பி ஜுட் பிளாசியஸ் பெரேரா திறந்துள்ளதால் அந்த மாதிரிகளின் நேர்மையை நீதிமன்றம் உறுதி செய்ய இயலாமல் இருப்பதால் அன்வாரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பது பாதுகாப்பானதாக இருக்காது என அவரை விடுவித்த நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா கூறினார்.